ஜபோரிஜியா : உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மரியுபோல் நகரில் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதியில் இருந்து, மக்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
கடந்த பிப்ரவரி, 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளிடம் இருந்து ஆயுதங்களைப் பெறும் உக்ரைன் ராணுவத்தினர், ரஷ்ய படைகளை எதிர்த்து வருகின்றனர். இந்தப் போரில், இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷ்ய படையினர், துறைமுக நகரமான மரியுபோல் நகரை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். அஜோவ்ஸ்டால் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதியை தவிர, இதர பகுதிகளை, அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதியில், பொதுமக்கள், 1,000 பேர் தஞ்சமடைந்துள்ளதாகவும்; 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், அந்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று, 100க்கும் மேற்பட்டோர், அங்கிருந்து வெளியேறி உள்ளதாகவும்; ஜபோரிஜியா நகருக்கு, அவர்கள் பாதுகாப்பான வழித்தடங்கள் வாயிலாக அழைத்துச் செல்லப்பட உள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “பல நாட்களுக்குப் பின், மக்களை மீட்பதற்கான வழித்தடங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன,” என்றார்.
Advertisement