பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா (BJYM) அமைப்பின், தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா வெறுப்பைத் தூண்டும்விதமான அறிக்கைகளை வெளியிட்டதாகவும், வதந்திகளைப் பரப்பி, மத மற்றும் வகுப்புவாதக் கலவரங்களை உருவாக்க முயன்றதாக… ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சன்னி சிங் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக, கடந்த மாதம் அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 30 அன்று `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பற்றி டெல்லி சட்டமன்றத்தில் பேசியதற்காக முதல்வர் வீட்டின் முன் நடந்த போராட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாக்கா தஜிந்தர் பால் சிங் மிரட்டும் தொனியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி போலீஸார் அவரை தற்போது கைதுசெய்திருக்கிறார்கள்.

அவரது கைது தொடர்பாக தஜிந்தர் பால் சிங்கின் தந்தை ப்ரீத்பால் சிங் பாக்கா ஊடகங்களிடம், “காலை 10 மணியளவில் பஞ்சாப் காவல்துறை என் வீட்டுக்குள் நுழைந்தது. என் மகனைக் கைது செய்வதை நான் வீடியோ எடுக்க முயன்றபோது, காவலர்கள் என் முகத்தில் குத்தினார்கள். அவர்கள் எனது செல்போனையும் எடுத்துச் சென்றனர். தஜிந்தரை வெளியே இழுத்துச் சென்றனர். பாரம்பர்யமான தலைப்பாகையை அணியக்கூட அனுமதிக்கவில்லை” எனக் கூறினார்.

அதையடுத்து, தஜிந்தர் பால் சிங்கின் கைது நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளை மிரட்டுவதற்காகப் பஞ்சாப்பில் தனது கட்சியின் அரசியல் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியிருப்பது மிகவும் வெட்கக்கேடானது. இந்த நெருக்கடியான நேரத்தில் டெல்லியின் ஒவ்வொரு குடிமகனும் தஜிந்தர் பால் சிங் பக்காவின் குடும்பத்துடன் நிற்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும், பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா, “தஜிந்தர் பக்காவை அவரது வீட்டிலிருந்து 50 பஞ்சாப் காவல்துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர். உண்மையான தலைவரான அவரை, இது போன்ற கோமாளித்தனங்களால் மிரட்டவோ பலவீனப்படுத்தவோ முடியாது” எனக் கூறியிருந்தார்.

இதற்கிடையில், தஜிந்தர் பால் சிங் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் அரசாங்கமும் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். டெல்லி முதல்வர் காஷ்மீரி பண்டிட்களிடம் மன்னிப்புக் கேட்கும் வரை கெஜ்ரிவாலைத் தொடர்ந்து விமர்சிப்பேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பஞ்சாப் காவல்துறை தன் மகனைக் கடத்தி செல்வதாக தஜிந்தர் பால் சிங்கின் தந்தை ப்ரீத்பால் சிங் பாக்கா ஹரியான மாநில காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் புகாரின் அடிப்படையில் கடத்தல் வழக்கை டெல்லி காவல்துறை பதிவுசெய்து, மொஹாலிக்கு தஜிந்தர் பால் சிங்கை அழைத்துச் சென்ற பஞ்சாப் போலீஸாரை, ஹரியானா போலீஸார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.

ஹரியானா காவல்துறை, தஜிந்தர் பால் சிங் ஏற்றிச் சென்ற பஞ்சாப் காவல்துறை வாகனத்தைச் சுற்றிவளைத்து, அவர்களை குருக்ஷேத்திராவில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இது கடத்தல் அல்ல என்றும், ஹரியானா காவல்துறை தேவையின்றி எங்களைத் தடுத்து நிறுத்துவதாகவும் பஞ்சாப் காவல்துறை ஹரியானா காவல்துறை உயரதிகாரிக்குக் கடிதம் அனுப்பியது.

கைது தொடர்பாக தங்களுக்கு எந்த முன் தகவலும் வழங்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும், பஞ்சாப் காவல்துறை, முன் அறிவிப்பு கொடுக்கப்பட்டதாகவும், அவர்களின் குழு ஒன்று நேற்று மாலை முதல் ஜனக்புரி காவல் நிலையத்தில் இருப்பதாகவும் கூறி குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
#WATCH Delhi: | BJP workers protest outside Aam Aadmi Party office in view of Tajinder Pal Singh Bagga’s arrest by Punjab Police from Delhi, earlier in the day. pic.twitter.com/k6FHd5QFuL
â ANI (@ANI) May 6, 2022
இந்த நிலையில், தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.