வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு,-‘ஜியோமி’ நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து 5,551 கோடி ரூபாயை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
![]() |
நம் அண்டை நாடான சீனாவை சேர்ந்த ஜியோமி நிறுவனம், ‘ஜியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நம் நாட்டில் இயங்கி வருகிறது. இவர்கள், எம்.ஐ., என்ற பெயரில், ‘மொபைல் போன்’களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ‘இந்நிறுவனம், தொழில்நுட்பத்துக்கான பங்கு என்ற பெயரில், அமெரிக்காவை சேர்ந்த இரு நிறுவனங்கள், சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்துள்ளனர்.
![]() |
‘இது, ‘பெமா’ எனப்படும், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்துக்கு புறம்பானது’ என, அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, ஜியோமி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 5,551 கோடி ரூபாயை அமலாக்கத் துறை சமீபத்தில் முடக்கியது. இதை எதிர்த்து, ஜியோமி நிறுவனம் சார்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Advertisement