புதுடெல்லி: எல்லைப்புற சாலை கட்டுமானப்பணிகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
எல்லைப்புற சாலைகள் நிறுவனம் (பிஆர்ஓ) 1960-ம் ஆண்டு மே 7-ம் தேதி நிறுவப்பட்டது. இதன் 63-வது ஆண்டு தினம் டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நாட்டின் வடக்கு எல்லையில் கடந்த சில ஆண்டுகளாக சீனர்களின் இருப்பு அதிகரித்துள்ளது. மலைப்பாங்களான இடங்களில் கட்டுமானப் பணிகளில் இவர்களுக்குள்ள திறமையால் பல்வேறு இடங்களுக்கு மிக விரைவாக சென்றடைகின்றனர். எனவே பிஆர்ஓ தனது பணிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை முழுஅளவில் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி தனது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
2022-23-ம் நிதியாண்டில் பிஆர்ஓ-வுக்கான மூலதன நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு ரூ.3,500 கோடியாக 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் எல்லைப்புற மேம்பாட்டில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது. எல்லைப்புற மக்கள் எந்த அளவு முன்னேற்றம் அடைகின்றனரோ அந்த அளவுக்கு தங்கள் பகுதியின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் அவர்களுக்கு இருக்கும்.
இமயமலை பகுதிகளில் சவாலான பருவ நிலைக்கு மத்தியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் பிஆர்ஓ முன்னோடி அமைப்பாக விளங்குகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
பிஆர்ஓ 1960-ம் ஆண்டு நிறுவப்பட்ட பிறகு இந்தியாவின் எல்லைப்புற பகுதிகள் மற்றும் நட்பு நாடுகளில் 60,000 கி.மீட்டருக்கு மேல் சாலைகள், 840 பாலங்கள், 19 விமான தளங்கள் மற்றும் பல்வேறு சுரங்கப் பாதைகளை சவாலான பருவநிலைக்கு மத்தியில் அமைத்துள்ளது. பிஆர்ஓ தனது ஓராண்டு பணியில் மிக அதிக அளவாக, 2021-22-ல் 87 பாலங்கள், 15 சாலைகள் என மொத்தம் 102 கட்டுமானப் பணிகளை முடித்துள்ளது.