சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கம்: வெங்கையா நாயுடு அழைப்பு!

பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, உரிய கொள்கைகளுடன், மக்கள் ‘கூட்டு நடவடிக்கை‘ மேற்கொள்ள வேண்டுமென குடியரசு துணைத் தலைவர்
வெங்கையா நாயுடு
வலியுறுத்தியுள்ளார். “புவி வெப்பமாதல் அளவை 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு குறைக்க, பெரிய அளவிலான நடைமுறை மாற்றங்களுடன், நுண்ணிய அளவிலான வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்தவும் முயற்சிப்பது அவசியம் என்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கமும் தொடங்கப்பட வேண்டும்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்லுயிரினக் குறைவு மற்றும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பெரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தடுக்கவும், ஆத்ம பரிசோதனை செய்வதுடன், உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “பூமியைப் பாதுகாப்பது பற்றி ஆராய்ந்து விவாதிப்பது அரசின் கடமை மட்டுமல்ல, மாறாக ஒவ்வொரு குடிமகன் மற்றும் மனிதர்களின் கடமை“ என்று கூறினார்.

மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைகழகத்தில்,
சுற்றுச்சூழல்
பன்மை மற்றும் சுற்றுச்சூழல் சட்டவியல் பற்றிய சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய வெங்கையா நாயுடு, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளில், இந்தியா உலகிலேயே எப்போதும் முன்னணியில் இருப்பதாகக் கூறினார். கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திரமோடி உறுதியளித்தபடி, இந்தியாவிற்கான இலக்குகளை எட்ட நாடு உறுதி பூண்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியக் கலாச்சாரம், இயற்கையை எப்போதும் போற்றி வணங்கி வருகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை நேர்மையான முறையில் நடைமுறைப்படுத்துவதோடு, சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார். இதற்கேற்ப, மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முற்காலத்தில், கிராமப்புற மக்கள் ஒன்றினைந்து, தங்களுக்கு அருகேயுள்ள வனப்பகுதிகளை பாதுகாத்தல் மற்றும் குளம், குட்டைகள், கால்வாய்களை புனரமைத்ததையும் வெங்கையா நாயுடு நினைவுகூர்ந்தார். “மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்துவது தான் தற்போதைய தேவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் இயக்கமாக மாறாவிட்டால், நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்“ என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டிய அவர், அதிக அளவிலான வழக்கறிஞர்களுக்கு சுற்றுச்சூழல் சட்டங்களில் உரிய பயிற்சியளிப்பது உடனடித் தேவை என்றும் கூறினார். சுற்றுச்சூழல் சார்ந்த வழக்குகளுக்கு விரைந்து தீர்வுகாண ஏதுவாக, கூடுதலாக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதுடன், மக்களிடையே சுற்றுச்சூழல் நீதியை ஏற்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.