மயிலாடுதுறை: பட்டினப்பிரவேசம் விழாவை வழக்கம்போல் நடத்த்திக் கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்திருக்கிறார் என்று தருமபுரம் ஆதீனம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலாடுதுறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பட்டினப்பிரவேசம் விழாவை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்திருக்கிறார். அவருக்கு நமது நல் ஆசிகள். இந்த விழாவை எப்படியும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தோம். அதற்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மிகவும் முயன்றிருந்தார். அவருக்கும், அறநிலையத்துறை ஆணையர், செயலர் ஆகியோருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
மரபுவழிபட்ட இதுபோன்ற சம்பிரதாயங்களில் அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் என்றைக்குமே மாறாது என்பதை, பட்டினப்பிரவேசத்துக்கு அனுமதி வழங்கியதன் மூலமாக நிரூபித்துக் காட்டியுள்ளது. தமிழ் வழியில் இருந்து அவர்களது முன்னோர்கள் எந்தளவுக்கு இந்த ஆட்சிபீடத்தை நடத்திக் கொண்டிருந்தார்களோ, அதே வழியில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அதனை நடத்திக் கொண்டிருக்கிறார். நேற்று இரவு, பட்டினப்பிரவேசம் நிகழ்வு சம்பிரதாயப்படி நடத்திக்கொள்ளலாம் என்று அவர் அறிவித்திருக்கிறார்.
ஆட்சியாளர்கள் அவர்களுடைய கொள்கையில் எப்படி உறுதியாக இருக்கிறார்களோ, அதைப்போலத்தான் எங்களுடைய கொள்கையில் நாங்கள் இருக்கிறோம். தோளில் சுமப்பதை மனிதாபிமானம் அற்றது என்று சிலர் விமர்சிக்கின்றனர், ஆனால் விருப்பப்பட்டுத்தான் தொண்டர்கள் சுமக்கின்றனர் என்று நாங்கள் கூறுகிறோம். இறைவன் கொடுத்த தவத்தினால் கிடைக்கிறது இந்த பல்லக்கு. இதனை சுமப்பதை தொண்டர்கள் எளிதானதாகவே நினைக்கின்றனர்” என்று கூறினார்.
தடையும் கோரிக்கைகளும்.. தருமபுரம் ஆதீனத்தில் கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கும்படி அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்தச் சூழலில், எப்படியாவது பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்ட மத குருமார்களும், பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) மாலை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பால்ய சுவாமிகள், மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சந்தித்து பட்டினப்பிரவேசம் தொடர்பாக கோரிக்கை விடுத்தனர்.