புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் உட்பட யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கு பெறுபவர். எம்.பி., எம்எல்ஏ.க்களின் வாக்குகளுக்கு தனித்தனி மதிப்பு உண்டு.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்பாக, அங்கு 83 சட்டப்பேரவை தொகுதிகள் இருந்தன. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி, ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை அமைக்கப்படும், லடாக் பகுதி மத்திய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும். சட்டப்பேரவை தொகுதிகள் வரையறுக்கும் பணி முடிந்த பிறகு, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
ஜம்மு காஷ்மீர் தொகுதி வரையறை ஆணையம் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில், புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 90 உறுப்பினர்கள் அடங்கிய அவையை பரிந்துரைத்தது.
மாநில சட்டப்பேரவை உறுப் பினர்கள் இல்லாமல், குடியரசுத் தலைவர் தேர்தல் நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 1974ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை கலைக்கப்பட்டபோதும், குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு பக்ருதீன் அலி அகமது தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் ஜம்மு காஷ்மீர் பிரதிநிதித்துவம் இல்லாமல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறாது. ஜம்மு காஷ்மீர் எம்.பி.க்கள் வாக்களித்து குடியரசுத் தலை வரை தேர்வு செய்வர்.
கடந்த 1952ம் ஆண்டில் எம்.பி.யின் வாக்கு மதிப்பு 494 ஆக இருந்தது. அதன்பின் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல்களில், எம்.பி.யின் வாக்கு மதிப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த 1997-ம் ஆண்டிலிருந்து குடியரசுத் தலைவர் தேர்தலில், எம்.பி.யின் வாக்குமதிப்பு 708-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாததால், எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700 ஆக குறைய வாய்ப்புள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அதற்கு முன்பாக மாநிலங் களவை மற்றும் மாநில சட்டப் பேரவை தொகுதிகளில் உள்ள காலியிடங்களை இடைத்தேர்தல் கள் மூலம் நிரப்ப தேர்தல் ஆணை யம் முயற்சிக்கிறது.-பிடிஐ