வக்கிர மனப்பான்மை சமூதாயத்திற்கு நல்லதல்ல: சுப்ரியா சுலே எம்.பி. கருத்து

மும்பை :

மராத்தி நடிகையான கேதகி சிதாலே சமீபத்தில் தனது வலைதள பக்கத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குறித்து வேறொருவர் கூறியதாக பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பற்றி மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டு இருந்ததுடன், “சரத்பவார் பிராமணர்களை வெறுக்கிறார்” மற்றும் அவருக்கு நரகம் காத்திருக்கிறது போன்ற வார்த்தைகள் இடம்பெற்று இருந்தது.

நடிகையின் இந்த பதிவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தானே, புனே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து கல்வா போலீசார் நடிகை கேதகி சிதாலே மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை அதிடியாக கைது செய்தனர். இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-

எனக்கு கேதகி சிதாலேவை தெரியாது. இது நமது காலசாரம் குறித்த பிரச்சினை. இதுபோன்ற மோசமான பதிவுக்கு எதிராக பேசியதற்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் பெற்றோருக்கும், பொது வாழ்வில் நீங்கள் வணக்கும் ஒருவருக்கும் எதிராக யாராவது பேசுவது விரும்பத்தக்கதல்ல. இத்தகைய வக்கிர மனப்பான்மை சமுதாயத்திற்கு நல்லதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.