கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கியது : கமல் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பங்கேற்பு

75வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. 75வது விழா என்பதால் வழக்கத்தை விட கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவின் புதுமையாக விளையாட்டு போட்டிகளில் ஒவ்வொரு நாட்டு அணியினரும் தேசிய கொடி பிடித்து அணிவகுத்து வருவது போன்று பல்வேறு நாட்டை சேர்ந்த திரை கலைஞர்கள் தனித்தனியாக ரெட் கார்பெட்டில் அணிவகுத்து வந்தார்கள்.

அதன்படி இந்திய அணியில் நடிகைகள் தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் உள்ளிட்டோர் அணிவகுத்து வந்தனர். இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மூன்று பெருமையான விஷயங்கள் உள்ளன. மாதவன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள ராக்கெட்டரி, கமல் நடித்து, தயாரித்துள்ள விக்ரம், பார்த்திபன் நடித்து, தயாரித்துள்ள இரவின் நிழல் ஆகிய 3 படங்கள் திரையிடப்படுகிறது. இதற்காக கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், இவர்களுடன் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோரும் கேன்ஸ் சென்றுள்ளனர்.

துவக்க விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பேசியதாவது: 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக இந்தியா கவுரவத்துக்குரிய நாடு என்ற முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தற்போது மீடியாக்களும், சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகின்றன.

இந்தியாவின் ஓடிடி சந்தை 2023ம் ஆண்டுவாக்கில் 21 சதவீதம் வளர்ச்சி அடைந்து, ஆண்டு வருவாய் ரூ.12,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையின் வணிகத்தில் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். இது விரைவாக வளர்ந்து வரும் துறை என்ற முறையில், 2025க்குள் ஆண்டுக்கு ரூ.24 ட்ரில்லியன் வருவாயை உருவாக்கி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.