கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமாக இறந்து கிடந்த திருநங்கை நடிகை

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடல் அழகியும், நடிகையுமான ஷகானா மர்மாக இறந்தார்.
நடிகை ஷகானா சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஷகானாவின் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள் நேற்று கொச்சியில் திருநங்கை நடிகையும், மாடல் அழகியுமான ஷெரின் ஷெலின் மாத்யூ மர்மமாக இறந்துள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு:
ஆலப்புழாவை சேர்ந்தவர் ஷெரின் ஷெலின் மாத்யூ (வயது 26).திருநங்கையான இவர் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.மேலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இதற்காக கொச்சி சக்கப்பரம்பு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.
திருநங்கை நடிகை ஷெரின் ஷெலின் மாத்யூவுடன் அவரது நண்பர்கள் சிலரும் தங்கி இருந்தனர். நேற்று ஷெரின் ஷெலின் மாத்யூ வீட்டில் இறந்து கிடந்தார்.இது பற்றி அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகை ஷெரின் ஷெலின் மாத்யூவுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஷெரின் ஷெலின் மாத்யூ மரணம் அடைந்திருப்பது அவரது உறவினர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் நடிகையும், திருநங்கையுமான ஷெரின் ஷெலின் மாத்யூ இறப்பை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷெரின் ஷெலின் மாத்யூ ஆலப்புழா திருநங்கைகள் நல வாரிய உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.