கேரள போக்குவரத்து துறையில் காலாவதியான அரசு பஸ்களில் பள்ளி வகுப்பறைகள், நூலகம் அமைப்பு

திருவனந்தபுரம்:

கேரளாவில் அரசு போக்குவரத்து கழகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் காரணமாக டிரைவர், கண்டக்டர்களுக்கு மாதம்தோறும் சம்பளம் வழங்குவதும் தாமதமாகி வருகிறது.

இதற்காக அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் ஈட்டும் பணிகளை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது கேரள அரசு போக்குவரத்து கழகத்தில் காலாவதியான பஸ்கள் ஏராளமாக உள்ளன. இவற்றை இரும்பு விலைக்கு விற்றால் அதிகபட்சம் ஒரு பஸ் ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை ஆகும். அதற்கு பதிலாக இந்த பஸ்களை பயன் உள்ள வகையில் மாற்றி அதனை வாடகைக்கு விட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என போக்குவரத்து உயர் அதிகாரிகள் கருதினர். இதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக மலை கிராமங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் டெப்போக்களில் நிற்கும் பஸ்களை தங்கும் அறைகளாக மாற்றி வாடகைக்கு விடும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

இதையடுத்து காலாவதியான பஸ்களை காயலான் கடையில் எடைக்கு போடுவதைவிட அவற்றை பள்ளிகளில் வகுப்பறைகளாகவும், நூலகங்களாகவும் மாற்றி வாடகைக்கு விட திட்டமிடப்பட்டது.

இதுபற்றி கல்வித்துறை மந்திரி சிவன்குட்டியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அவர் முதற்கட்டமாக மணக்காடு பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 2 வகுப்பறைகள் அமைக்க காலாவதியான 2 தாழ்தள பஸ்களை வழங்க கேட்டுக்கொண்டார். இது போல பாலக்காடு பகுதியில் உள்ள பள்ளியில் நூலகம் மற்றும் வகுப்பறைகள் அமைக்கவும் பஸ்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டங்கள் மூலம் நஷ்டத்தில் இயங்கும் கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து போக்குவரத்து கழக டெப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ள காலாவதி பஸ்கள் அனைத்தையும் சீரமைத்து வகுப்பறைகளாகவும், நூலகங்களாகவும் மாற்ற போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.