முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதல் திஷா குழு கூட்டம்

சென்னை:
தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA குழு) ஏற்படுத்தப்பட்டுள்ளது.  
வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA குழு) குழுவின் மாநில அளவிலான முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (18.5.2022) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  
இக்கூட்டத்தில், முதலமைச்சர் தமது தலைமையுரையில், பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை விரைவுபடுத்தி குறித்த காலத்திற்குள் முடித்திட வேண்டும் எனவும், திட்ட செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெறும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.  மேலும், பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த கூடுதல் நிதியை மத்திய அரசிடமிருந்து பெற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆகிய ஐந்து துறைகளைச் சார்ந்த மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், அனைவருக்கும் கல்வித் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  குழுவின் உறுப்பினர்கள் மேற்கண்ட திட்டங்கள் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இந்த நிதியாண்டில் (2022-2023) நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களின் விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பி.ஆர்.நடராஜன், சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், ப.இரவீந்திரநாத்குமார், கே.நவாஸ்கனி, ஆர்.எஸ்.பாரதி, ஏ.நவநீதகிருஷ்ணன் ஆகியோரும், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் என்.எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், எம்.பூமிநாதன், ஜே.எம்.எச்.அசன் மவுலானா, கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரும், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, அரசு துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.