நெல்லை கல்குவாரி விபத்தில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ், அவரது மகன் குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), இளையநயினார்குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் (23) ஆகிய 3 பேர் பலியானார்கள்.
விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கல்குவாரி விபத்து தொடர்பாக நான்குனேரி காவல் உதவி கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இந்த வழக்கில் நேற்றுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ், அவரின் மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருவில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர் செல்வராஜ் அவரின் மகன் குமார் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
முன்னதாக, செல்வராஜின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், அவரின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் நேற்று சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.