நடிகர் சஞ்சய் தத்துடன் கல்லூரி காலத்தில் சினிமாவில் நடித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி: ஓய்வுபெறும் நாளில் வெளியே தெரிந்தது

புதுடெல்லி: ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிராலா கிராமத்தைச் சேர்ந்த  உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், கடந்த 2016ம் ஆண்டு மே 13ம் தேதி உச்ச  நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் 5வது நீதிபதியான இவர் நேற்றுடன் ஓய்வுபெற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பில் பிரியாவிடை விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் பிரதீப் குமார் ராய் பேசுகையில், ‘இன்று ஓய்வுபெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், கடந்த 1989ம் ஆண்டு வெளியான ‘கனூன் அப்னா அப்னா’ என்ற திரைப்படத்தில், சஞ்சய் தத் மற்றும் காதர் கான் ஆகியோர் நடித்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தார்.ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் ஆந்திர பிரதேச மாநிலத்தை வலுவூட்டினார்’ என்றார். தொடர்ந்து நீதிபதி நாகேஸ்வர ராவ் பேசுகையில், ‘நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில், திரைப்பட இயக்குனராக என் உறவினர் மூலம் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வளவுதான்; மற்றபடி இதுபெரிய விஷயமல்ல. நான் நடிகனாக விரும்பவில்லை. கிரிக்கெட் போட்டிகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். நான் வேலை செய்து கொண்டிருக்கும் போதும், ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்காக அவ்வப்போது டிவியை ஆன் செய்வேன்’ என்றார். அதன்பின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா கூறுகையில், ‘நீதிபதி நாகேஸ்வர ராவின் ஓய்வு, நீதிபதிகளின் அமர்வுக்கு மிகப்பெரிய இழப்பாகும்; வழக்குகள் குறித்து அவரது தீவிர பகுப்பாய்வு திறன் அலாதியானது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.