ரிங்கு சிங் ஜெயித்த கதை: அப்பாவின் மாத வருமானம் ரூ.10,000; 2018-ல் மகன் ஏலம்போன தொகை ரூ.80 லட்சம்!

கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டபோது தன் குடும்பம் அடைந்த இன்ப அதிர்ச்சி, நிம்மதி குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் ரிங்கு சிங். உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் பிறந்தவர் ரிங்கு. முதன்முதலாக 2017-ம் ஆண்டில் பஞ்சாப் அணியால் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட அவர், அந்த சீசனின் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் அவர் காட்டிய அதிரடி காரணமாக அடுத்த ஆண்டே கொல்கத்தா அணி அவர் மீது 80 லட்சம் முதலீடு செய்தது. மேலும் 2022-ம் ஆண்டு மெகா ஏலத்திலும் அதே அணி அவரை 55 லட்சத்திற்கு மீண்டும் வாங்கியது.

Rinku Singh

ரிங்குவின் பால்ய காலம் மிகவும் கடினமாகவே அமைந்தது. அவரின் தந்தை இன்றும் LPG சிலிண்டர்களை வீடுதோறும் டெலிவரி செய்கிறார். ஐந்து பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த ரிங்கு சிறுவயது முதலே கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்டவராய் விளங்கினார். தன் 16-வது வயதில் தன் முதல் லிஸ்ட் A போட்டியில் அறிமுகமான ரிங்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதல் தர கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினார். இவர் 2019-ல் ஒருமுறை வெளிநாட்டு லீக் போட்டி ஒன்றில் விளையாடினார். ஆனால் பி.சி.சி.ஐ-யின் விதிகள் படி எந்த ஒரு வெளிநாட்டு லீக்கிலும் இந்திய வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை. இதனால் ரிங்கு சிங்கிற்கு 3 மாதங்கள் தடை விதித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.

2018-ம் ஆண்டு ஏலம் குறித்து கூறும் அவர், “என் குடும்பத்தில் இவ்வளவு பெரிய தொகையை யாரும் பார்த்தது கூட கிடையாது. என் தந்தையின் மாத வருமானம் 10-12 ஆயிரம்தான். 80 லட்சம் என்பது என் குடும்பத்திற்கு இமாலய தொகை. இந்தத் தொகைதான் என் குடும்பத்தின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க உதவியது. கொல்கத்தா அணிதான் என் வாழ்க்கையை மாற்றியமைத்தது” என்றார்.

Rinku Singh

முழங்கால் காயத்தால் 2021-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரை முழுவதுமாகத் தவறவிட்ட ரிங்கு சிங், இந்தாண்டு லோயர் மிடில் ஆர்டர் பேட்டராக களமிறங்கி 7 போட்டிகளில் 148.72 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 174 ரன்கள் எடுத்துள்ளார். நான்கு சீசன்களைச் சேர்த்து 10 போட்டிகளில் மட்டுமே விளையாடி 77 ரன்களை அடித்திருந்த ரிங்குக்கு, இந்த சீசன் ஒரு திருப்புமுனையே! தன் பேட்டிங்கால் மட்டுமன்றி தன் ஃபீல்டிங்காலும் அணிக்கு மிகப்பெரிய வலு சேர்கிறார் ரிங்கு.

லக்னோ அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் 15 பந்துகளில் 40 ரன்கள் அடித்த ரிங்கு அணியின் நம்பிக்கையை முழுவதுமாக பூர்த்தி செய்தார். அப்போட்டியில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தாலும் ரிங்குவின் இனிவரும் அதிரடி அத்தியாயத்திற்கான தொடக்கமே அது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.