மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை… வரலாற்றில் முதல்முறை!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை வரும் 24-ஆம்தேதி திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சுதந்திர இந்தியாவில் மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
வழக்கமாக டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். அணையில் இருந்து இதுவரை ஜூன் மாதத்தில் 11 முறை முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்புப்பகுதியில் பெய்துவரும் மழையால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்டா விவசாயிகளின் நலன்கருதி குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டு மே 24-ஆம் தேதியே மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
image
மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவது அணை வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க… ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து – 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
இதனிடையே குறுவை சாகுபடிக்காக இடுபொருட்களும், வேளாண் கடன்களும் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு துறைகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அணை திறப்புக்காக முன்கூட்டியே திட்டமிட்டு கடந்த ஒருமாத காலமாக 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாரும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும், ஆறுகளில் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிந்து, தற்போது வாய்க்கால்கள், வடிகால்களை தூர்வாரும் பணிகள் நடப்பதாகவும், இப்பணிகள் வரும் 31 ஆம்தேதிக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
இதற்கிடையே மயிலாடுதுறையில் தூர்வாரும்பணிகள் 70 சதவிகிதம் முடிந்துள்ளதாக பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.