பயணியை சரியான சில்லறை தராத காரணத்துக்காக தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இணைந்து சரமாரியாக தாக்கும் வீடியோவொன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், அன்னூர் அடுத்த பொங்கலூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரங்கசாமி. வேலை நிமித்தமாக அன்னூரில் இருந்து புளியம்பட்டி செல்வதற்காக என்.எம். எஸ் எஸ்.ஆர்.டி என்ற தனியார் பேருந்தில் நேற்று ஏறியுள்ளார். பயணச்சீட்டு வாங்கும்போது ரங்கசாமி நடத்துனரிடம் சரியான சில்லரை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நடத்துனர் அவரிடம் கடிந்து கொண்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க… புதிதாக மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு – எம்எல்ஏக்கள் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், சத்தியமங்கலம் சாலையில் பசூர் அருகே பேருந்தை நிறுத்திய ஓட்டுனர், நடத்துனர் உடன் இணைந்து ரங்கசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது கீழே இறங்கிய ரங்கசாமியை இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் ரங்கசாமிக்கு கழுத்துப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை வீடியோ எடுத்த வாகன ஓட்டி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக வீடியோவை அடிப்படையாக கொண்டு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
