லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும் பள்ளி நாட்களில் இருந்தே உறவு முறையில் பழகி வந்துள்ளனர். 
அவர்களது நட்பு கல்லூரி காலத்திலும் தொடர்ந்துள்ளது. பட்டப்படிப்பு முடிந்ததும், பிரிய மனமின்றி இருவரும் தம்பதியினர் போல் ஒன்றாக வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். 
இது குறித்த அறிந்த இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம்  பாத்திமா அவரது உறவினர்களால் கடத்தப்பட்டுள்ளார். 
இதை அடுத்து அதிலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.  அதில் தானும் தனது துணைவியார் பாத்திமா நூராவும் குடும்பத்தினரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். 
தன்னுடன் தங்குவதற்காக ஆலுவாவுக்கு வந்த பாத்திமாவை அவரது குடும்பத்தினர் கடத்திச் சென்றதாகவும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதே நேரத்தில் மனுதாரர் ஆதிலா நஸ்ரினும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று நடைபெற்ற விசாரணையின் முடிவில் லெஸ்பியன் ஜோடி ஒன்றாக வாழ்வதற்கு தடையில்லை என்று நீதிபதி வினோத் சந்திரன் உத்தரவிட்டார். மேலும் ஆட்கொணர்வு மனு குறித்த வழக்கையும் அவர் முடித்து வைத்தார்.
இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிலா, ஓரின சேர்க்கையாளர்கள் சமூகத்திடம் இருந்து தங்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும்,  கேரள உயர் நீதிமன்ற உத்தரவால், நாங்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம் என்றும் கூறினார்.

எனினும்  நாங்கள் முற்றிலும் சுதந்திரமாக இல்லை, எங்கள் குடும்பங்கள் இன்னும் எங்களை அச்சுறுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.