வசனகர்த்தா ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது- அரசு அறிவிப்பு

சென்னை:
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 3 அன்று வழங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது.
விருதாளரைத் தேர்ந்தெடுக்க திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில்,  நடிகர் சங்கத் தலைவர் திரு.நாசர்,  திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட  குழு அமைக்கப்பட்டு, 2022-ஆம் ஆண்டிற்கான  கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்காக பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிய புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 90) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. 
நடிகருக்கென்று தனிபாணி கொள்ளாமல்,  தன்னை முன்னிறுத்தாமல், கதாபாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்.   
திருவாரூர் மாவட்டத்தில் பிறந்த ஆரூர்தாஸ், முன்னணி நடிகர்கள்,  நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த 1,000  திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயரில் உள்ள ஏசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் வைத்துக் கொண்டார்.  60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த  அனுபவம் ஒரு சாதனையாகும்.  
கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினமான நாளை (3.6.2022) ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பரிசுத் தொகை ரூபாய் பத்து இலட்சமும் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.