இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கும் புதிய செயற்கைக்கோள்; இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்!

ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிற்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு ஏ.பி.ஜே அப்துல் கலாம் உறவினர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து அப்துல் கலாம் இல்லத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணாக்கர்களின் பல்வேறு கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது,

”இந்தியாவை உலகத்தில் முதல் இடத்திற்குக் கொண்டு வருவது இளைஞர்கள் கையில்தான் உள்ளது. அதனால்தான் நான் செல்லுமிடமெல்லாம் கிராமப்புற மாணவர்களை அதிக அளவில் சந்தித்துப் பேசிவருகிறேன்‌.

இஸ்ரோவும் நாசாவும் சேர்ந்து உருவாக்கிக்கொண்டிருக்கின்ற புதிய செயற்கைக்கோள் ஒன்று இந்தியாவிலிருந்து ஏவப்பட உள்ளது. இந்தச் செயற்கைக்கோள் ஏவப்பட்ட பின்னர் உலகத்தின் உள்ள தட்பவெப்ப நிலை, பூகம்பம் போன்றவற்றை முன்கூட்டியே அறியக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். இது இந்தியாவிலிருந்து ஏவப்பட்டாலும் உலகநாடுகளுக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும்” என்றவர்,

மாணவர்களிடம் கலந்துறையாடிய சிவன்

ககன்யா விண்கலத்தைத் தற்போது சோதனை செய்து வருவதாகவும், முதலில் மனிதர்கள் இல்லாமல் இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பின்னர் மனிதர்கள் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ”குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம் அமைக்க அனுமதியளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக 2,200 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது; இஸ்ரோ தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டதையடுத்து முதல்கட்டமாக 1,750 ஏக்கர் இடம் வழங்கப்பட்டுள்ளது. முழுமையான இடங்கள் கையகப்படுத்திய பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்.

பி.எஸ்‌.எல்.வி மார்க் 3 நல்ல ஆப்பர்சூனிட்டி ஆக உள்ளது. இந்த ஜி.எஸ்.எல்.வி மார்க் 34,000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளைக் கொண்டு சென்று வரும், அது படிப்படியாக உயர்த்தப்படும். இதுவரைக்கும் வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்ட செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தோம், தற்போது தன்னிறைவை அடையக்கூடிய கட்டத்தை நாம் தொட்டுவிட்டோம்” என்றார் சிவன்.

இதையடுத்து பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.