நாட்டில் சிதைக்கப்படும் கூட்டாட்சி தத்துவம்: சித்தராமையா ஆதங்கம்

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியால் வளர்ச்சியில் நாடு 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது. நாடு அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. இதைஅரசின் ஆவணங்களே கூறுகின்றன. நாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடன் சுழலில் சிக்கியுள்ளது. இந்திய நாணய மதிப்பு சரிந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் உயர்ந்து வருகின்றன.

பணவீக்கம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வேலையின்மை பிரச்சினை விண்ணை தொட்டுள்ளது. மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி சரிந்துவிட்டது. நாட்டின் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுகிறது. ஜனாநயகமும் ஆபத்தில் உள்ளது. நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு கட்டமைத்த பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன.

மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி தனது நண்பர்கள் அதானி உள்ளிட்டோரின் சொத்துகளை அதிகரிக்க உதவி செய்தார். மக்களுக்கு பொய் சொல்லி வந்துள்ளார். நாட்டின் மொத்த கடன் ரூ.155 லட்சம் கோடியாக அதிகரிக்கிறது. கடந்த 2013-14-ம் ஆண்டில் அனைத்து மாநிலங்களின் கடன் ரூ.22.12 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.70 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு (2023) மார்ச் மாதத்திற்குள் இது ரூ.80 லட்சம் கோடியாக உயரும். ஆகமொத்தம் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கடன் ரூ.235 லட்சம் கோடியாக அதிகரிக்கும். நாட்டின் மொத்த கடன் உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை தாண்ட கூடாது என்று என்று விதிமுறை உள்ளது.

ஆனால் அந்த கடன் உள்நாட்டு உற்பத்தியில் 89.06 சதவீதமாக உயர்ந்துவிட்டது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.270 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை திவாலாகிவிட்டது. வருவாயை விட கடன் அதிகமாக இருந்தால் அதை சீரான பொருளாதாரம் என்று கூற முடியுமா?. கர்நாடகமும் திவால் நிலையை தொடும் அளவுக்கு வந்துள்ளது.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.