ராஜஸ்தான் அமைச்சர் மகன் மீது பாலியல் புகார் – பெண் மீது மை வீச்சு

ராஜஸ்தான் அமைச்சர் மகனின் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண் மீது டெல்லியில் மை வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் மகேஷ் ஜோஷி. இவரது மகன் ரோஹித் ஜோஷி மீது டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அதில், “எனக்கும், ரோஹித் ஜோஷிக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் என்னை காதலிப்பதாக கூறினார். அதுமட்டுமல்லாமல், திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை பல முறை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இந்நிலையில், என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் அண்மையில் கூறினேன். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் எனக்கு கொலை மிரட்டலும் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறியிருந்தார்.
image
இந்த புகாரால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகன் செய்த தவறுக்கு பொறுப்பேற்று மகேஷ் ஜோஷி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற ரோஹித் ஜோஷி, நேற்று டெல்லி போலீஸார் முன்பு ஆஜரானார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் மகன் மீது புகார் கூறிய பெண், இன்று தனது தாயாருடன் வெளியே சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அந்தப் பெண் மீது கருப்பு மையை வீசிவிட்டு தப்பினர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மையில் ஏதேனும் திராவகம் போன்றவை கலந்திருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் அந்த மையில் கலக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.