Vikram:"விக்ரம் படத்துக்காக சிவாஜியிடம் வாங்கிய துப்பாக்கி" -நினைவுகள் பகிரும் ஒளிப்பதிவாளர் ரங்கா

தமிழ் சினிமாவில் எழுபது, எண்பது காலகட்ட ஒளிப்பதிவாளர்களில் வி.ரங்கா, பாபு, என்.கே.விஸ்வநாதன், விநாயகம் எனப் பலரும் வியக்க வைத்திருப்பார்கள். இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் கண்களாக பாபுவும் விநாயகமும்; இயக்குநர் ராமநாராயணனின் கண்ணாக என்.கே.விஸ்வநாதனும்; இயக்குநர்கள் ‘பசி’ துரை, ‘மலையூர் மம்பட்டியான்’ ராஜசேகருக்கும் கண்ணாக இருந்தவர் ரங்கா. நடிகர் திலகம் சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ், முரளி என டாப் ஹீரோக்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரங்கா. இவர், ரஜினியின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, கமலின் ‘விக்ரம்’ உட்பட 80 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். சாதனைகள் பல செய்த அந்த 78 வயது இளைஞர் ரங்காவிடம் பேசினேன்.

ரஜினியுடன் ரங்கா

நமது தலைமைப் புகைப்படக்கலைஞர் ராஜசேகர் ரங்காவை போட்டோஷூட் செய்தபோது, ரங்காவின் முகத்தில் நிழல் படியாமல் இருக்க, ரிப்ளைட்டருக்காக தெர்மாகோல் ஷீட்டைப் பயன்படுத்தினார். ”ரிப்ளைட்டருக்காக தெர்மாகோலும் சாட்டின் துணியையும் முதன்முதலில் மும்பையிலிருந்து கொண்டு வந்து பயன்படுத்தியது என் குருநாதர் ஒளிப்பதிவாளர் இஷான் ஆர்யாதான். அவர்கிட்ட கத்துக்கிட்டதை என் முதல் படம் ரஜினி நடிச்ச ‘ஆயிரம் ஜென்மங்கள்’ல நானும் பயன்படுத்தியிருக்கேன்” எனத் தன் நினைவுகளைப் பகிரத் தொடங்கினார்.

விக்ரம்

‘விக்ரம்’ வெளியாகி 36 வருஷங்கள் ஆகிவிட்டன… படம் பற்றிய நினைவுகளைச் சொல்லுங்கள்.

” நிறையவே இருக்கு. கமல், இப்ப உள்ள ‘விக்ரம்’ படத்தோட ஷோவுக்கும் என்னைக் கூப்பிட்டிருந்தார். படம் பார்த்தேன். ஆனா, அந்தப் படம் வேறு. இந்தப் படம் வேறு. 1986-ல் உள்ள என்னோட ‘விக்ரம்’ ஞாபகத்துக்கு வந்துச்சு. அந்தப் படம் எனக்குக் கிடைக்கக் காரணம் எங்க டைரக்டர் ராஜசேகர் சாரும், கமல் சாரும்தான். அந்த காலகட்டத்துல ராக்கெட், சாட்டிலைட் பின்னணியோட ஒரு கதைன்னதும் பிரமிப்பா இருந்துச்சு. அப்பவே பெரிய பட்ஜெட் ஆச்சு. அந்த ராக்கெட்டை திருவான்மியூர்ல ஒரு இன்ஜினீயர்தான் ரெடி பண்ணி, லாரியில பொருத்திக் கொடுத்தார். அப்ப பிலிம் காலம், இப்ப இருக்கற மானிட்டர் வசதி அப்ப கிடையாது. அதனால நடிகர்கள், இயக்குநர் எல்லாரும் கேமராமேன் சொல்றதைத்தான் கேட்பாங்க. ரஷ் பார்க்கும் போதுதான் என்ன எடுத்திருக்கோம்னு தெரியவரும்.

இந்தப் படத்துல ரிஸ்கி ஷாட்ஸ் நிறைய எடுத்தோம். அந்தக் காலத்துல இண்டோர்ல சில் அவுட் ஷாட்கள் எடுத்திருக்கேன். ஹெலிகாப்டர், கிரேன்னு நிறைய ஷூட் பண்ணியிருக்கேன். கமல் சார் டெக்னிக்கலா ஸ்டிராங்கா இருப்பார். அவர் கையோடு டெக்னிக்கல் எக்யூப்மென்ட்ஸ்களும் கொண்டு வந்திருப்பார். அவரது ஆரம்பக்காலம் தங்கப்பன் சார்கிட்ட டான்ஸ் அசிஸ்டென்ட் ஆக இருக்கும்போது எனக்கு நட்பானார். அப்ப நானும் உதவி ஒளிப்பதிவாளர். கமல் ஸ்டோரி போர்டு இல்லாமல் ஷூட் வர மாட்டார். அவர் தயாரிக்கற படங்கள்ல அன்னிக்கு என்ன எடுக்கப்போறோம்னு எல்லாருக்குமே தெளிவா தெரியும்.

விக்ரம்

அதேபோல இயக்குநர் ராஜசேகரின் 12 படத்துக்கு மேல ஒளிப்பதிவு பண்ணியிருப்பேன். அவர்கிட்ட கதையே கேட்டதில்ல. கேமரா நாலேஜ் அவருக்கு அதிகம்னால, அவர் சொல்றதைக் கேட்பேன். அதுவே பெஸ்ட் ரிசல்ட்டா வந்துடும். சத்யராஜ் ‘விக்ரம்’ல வில்லனா பண்ணியிருப்பார். ‘காக்கி சட்டை’க்கும் நான் ஒளிப்பதிவு பண்ணினேன். அதுல ‘தகடு தகடு’ன்னு அவர் பேசுற டயலாக் ரொம்பப் பிரபலம். அப்புறம் சத்யராஜ் ஹீரோவா நடிச்ச ‘அண்ணாநகர் முதல் தெரு’வுக்கும் நான் ஒளிப்பதிவு பண்ணினேன். அதைப்போல ‘விக்ரம்.. விக்ரம்…’னு இடம்பெற்ற ஓப்பனிங் பாடலை வித்தியாசமா பேக் லைட்லேயே ஷூட் பண்ணியிருப்பேன். அதே லைட்டிங் செட்டப்பை ஜோத்பூர்ல நடந்த க்ளைமாக்ஸ்லேயும் ஷூட் பண்ணினோம். நாங்க ராஜஸ்தான் ஷூட் போறப்ப, ஒரு எலிக்கோவிலைப் பத்திக் கேள்விப்பட்டோம். அதை கமல்கிட்ட சொல்லி அங்கேயும் ஷூட் செய்தோம்.

அப்புறம் ‘வனிதாமணி…’ பாடல் கமலுக்கும் அம்பிகாவுக்கும் டூயட், சத்யராஜ் ஆள் அவங்கள துப்பாக்கியில ஷூட் பண்ணிடுவார். அந்தப் பாடல் சீனுக்காக சிவாஜி சார்கிட்ட அவரோட ரைப்பிளில் உள்ள லென்ஸைக் கேட்டு வாங்கி எடுத்திருப்போம். இன்னொரு விஷயம், அப்ப ரஜினி, கமல், சிரஞ்சீவி என யார் படமா இருந்தாலும் 35 நாள்களுக்குள் படப்பிடிப்பை முடிச்சிடுவோம். அதுக்கு மேல ஒருநாள்கூட படப்பிடிப்பு போக வேண்டியிருக்காது. ஒரு படத்தை முழுசா முடிச்ச பிறகே அடுத்த படத்துக்குப் போவோம்…”

ரங்கா

நீங்கள் சினிமாவுக்குள் எப்படி வந்தீர்கள்?

”முழுப்பெயர் ரங்கநாதன். சினிமாவுக்காக ரங்கா ஆனேன். மும்பை கேமராமேன் இஷான் ஆர்யா சார், வின்சென்ட் சார், சுந்தர் சார்னு பல ஒளிப்பதிவாளர்கள்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தேன். என் முதல் படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ அதுல ரஜினி சாரின் நட்பு கிடைச்சது. அவரோட ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘மாப்பிள்ளை’, ‘மாவீரன்’, ‘படிக்காதவன்’. ‘தர்மதுரை’னு படங்கள் பண்ணினேன். சிவாஜி சாருக்கும் ‘துணை’, ‘முதல்குரல்’ ‘படிக்காதவன்’னு பல படங்கள் பண்ணினேன். விஜயகாந்துக்கு ‘கூலிக்காரன்’, ‘ஈட்டி’, ‘ஆட்டோராஜா’; கமலுக்கு ‘விக்ரம்’, ‘காக்கிச்சட்டை’, ‘நீயா’ன்னு பல படங்கள்… இப்படி தமிழ், ஒரியான்னு 80 படங்கள் பண்ணியிருக்கேன். நான் ஒளிப்பதிவு பண்ணினதுல துரை இயக்கத்தில் ஷோபா நடிச்ச ‘பசி’ படம், அப்புறம் வாலி கதை எழுதி லட்சுமி நடிச்ச ‘ஒரே ஒரு கிராமத்திலே.’ தமிழில் சத்யன் நடிச்ச ‘இளையவன்’ படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணினேன். அதன்பிறகு ஒரியாமொழியில் தொடர்ந்து பத்துப் படங்கள் பண்ணியிருப்பேன். என் மகன் பாலாஜி ரங்காவும் ஒளிப்பதிவாளர்தான், மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டி’யும் உட்பட சில படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்.”

மகன் பாலாஜி ரங்காவுடன்

ரஜினியுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?

”இப்பவும் கூப்பிட்டுப் பேசுவார். அவர் இனிய மனிதர். அவரும் அமலாவும் நடிச்ச ‘மாப்பிள்ளை’ படத்துக்கு அல்லு அர்ஜுனின் அப்பாதான் தயாரிப்பாளர். அந்தப் படத்துல ‘மானின் இரு கண்கள் கொண்ட மானே… மானே…’ பாடல் ஷூட்டுக்காக ஊட்டி போயிருந்தோம். அதை எடுத்து முடிச்சிட்டு அப்படியே ஒகேனக்கல் போய் க்ளைமாக்ஸ் சீன்களை எடுக்கிறதா திட்டமிட்டிருந்தோம். ஆனா, நாம ஒண்ணு நினைச்சா, இயற்கை வேற ஒரு திட்டம் வச்சிருந்தது. ரஜினி, அமலாnனு நாங்க ஊட்டி போய் இறங்குறோம். பயங்கரமா மழை பெய்யுது. சரி மழைவிட்டதும் பாடலைp படமாக்கலாம்னு நினைச்சா, மூணு நாளாகியும் மழை விடவே இல்லை. தூறலும் சாரலுமா இருந்துச்சு. பிளான் பண்ணினபடி க்ளைமாக்ஸ் எடுக்க ஒகேனக்கல்லுக்கும் போக வேண்டிய கட்டாயம். ஊட்டியில நாலாவது நாள் மழை லேசா விட்டுச்சு. அவ்ளோதான். அந்தப் பாடலைப் படமாக்க ஆரம்பிச்சோம். மொத்தப் பாடலையும் இரண்டரை மணி நேரத்துல எடுத்து முடிச்சிட்டோம். அந்த வேகத்தில் எடுத்த பாடல் இன்னிக்கும் ரசிக்கும்படியா வந்திருக்கு. அதேபோல ‘காதலின் தீபம் ஒன்று…’ பாடலுக்கு அவுட்டோரில் டே லைட்டைப் பயன்படுத்தினேன். அதேபோல லைட்டிங் முறையைத்தான் ‘தர்மதுரை’யில் வரும் ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’க்கும் பயன்படுத்தியிருப்பேன்.

‘மாவீரன்’ படம் தமிழ் சினிமாவின் முதல் 70 எம்.எம். படம். ஆனாலும் உண்மையிலேயே 35 எம்.எம். கேமராவுலதான் படம் பிடிச்சிருப்போம். அதையே சினிமா ஸ்கோப் ஆகவும் பேலன்ஸ் பண்ணினேன். ரெண்டே ரெண்டு கேமரா பயன்படுத்தி அப்ப 70 எம்.எம். கொண்டு வந்தேன். தமிழ்நாட்டுலேயே அப்ப மொத்தமே நாலே நாலு தியேட்டர்களில்தான் 70 எம்.எம். திரைகள் இருந்துச்சு.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.