கிரெடிட் கார்டு UPI உடன் இணைப்பு; மக்களுக்கு சாதக, பாதகங்கள் என்னென்ன?

இனி கிரெடிட் கார்டுகளையும் UPI-ல் இணைத்துக்கொண்டு பயன்படுத்தலாம் என ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. இதுவரையிலும் ஸ்வைப்பிங் மற்றும் ஆன்லைன் பேமன்ட்டுகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த முடியும் என்றிருந்த நிலையில், தற்போது அதை UPI-ல் இணைக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவால் மக்களுக்கு சாதகமா அல்லது பாதகமா என நிதி ஆலோசகரும் மை அஸெட் கன்சாலிடேஷன் (Myassetconsolidation.com) நிறுவனத்தின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.

சுரேஷ் பார்த்தசாரதி

“டிஜிட்டலை நோக்கிய எந்த ஒரு நகர்வுமே வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை எளிதாக்கவே செய்யும். ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் `ரூபே’ வகை கிரெடிட் கார்டுகளை மட்டும்தான் UPI-ல் இணைத்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறது. ரூபே வகை கார்டுகள் இந்திய வங்கிகளால் அளிக்கப்படுபவை, மாஸ்டர், விசா கார்டுகள் சர்வதேச வங்கிகளால் அளிக்கப்படுபவை. நம் நாட்டில் தற்போது புழக்கத்தில் கிரெடிட் கார்டுகளில் மாஸ்டர், விசா கார்டுகளே அதிகம். இந்த நிலையில், கிரெடிட் கார்டுகளை UPI-யுடன் இணைக்கும் ஆர்.பி.ஐ-யின் முடிவை நிச்சயம் வரவேற்கலாம்.

இதனால் என்ன நன்மை கிடைக்கும் என்று பார்த்தால், இதுவரையிலும் கிரெடிட் கார்டை வைத்து ஸ்வைப்பிங் இயந்திரம் உள்ள கடைகளில் மட்டும்தான் பொருள் வாங்க முடியும். பேருந்து/ரயில் டிக்கெட் முன்பதிவு, சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஷாப்பிங் தளங்களில் பொருள்கள் மற்றும் உணவு என ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மட்டும்தான் மேற்கொள்ள முடியும் என்றிருந்தது.

கிரெடிட் கார்டுகளை UPI-யுடன் இணைப்பதன் மூலம் கூகிள் பே அக்கவுன்ட் வைத்திருக்கும் பெட்டிக்கடையில் கூட கிரெடிட் கார்டிலிருந்து உங்களால் பொருள்களை வாங்க முடியும்.

கார்ட் ஸ்வைப்பிங்

ஏதோ ஒரு சூழ்நிலையில், உங்கள் சேமிப்புக் கணக்கில் சுத்தமாக பணம் இல்லை; கிரெடிட் கார்டைப் பயன்படுத்தித்தான் பணப் பரிவர்த்தனை செய்தாக வேண்டும் அல்லது பொருளை வாங்கியாக வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் சாப்பிட வேண்டும் எனில், ஸ்வைப்பிங் இயந்திரம் வைத்திருக்கும் ஓரளவு பெரிய உணவகங்களில்தான் உங்களால் சாப்பிட முடியும். அந்த பில் தொகை உங்கள் பட்ஜெட்டுக்கு மீறியதாக இருந்தாலும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது தவிர, உங்களுக்கு வேறு வழியில்லை. இதுவே, கிரெடிட் கார்டை UPI-யுடன் இணைப்பதன் மூலம், உங்கள் பட்ஜெட்டுக்கேற்ற சிறிய உணவகங்களில்கூட நீங்கள் சாப்பிட்டுவிட்டு கூகிள் பே மூலம் பணத்தை அனுப்பிவிடலாம். இது கிரெடிட் கார்டு பயனாளிகளுக்கு மிகவும் நன்மை அளிப்பதாக இருக்கும்.

நம் நாட்டில் 26 கோடி மக்கள் UPI பயன்பாட்டாளர்களாக இருக்கின்றனர். இது நம் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30% ஆகும். கடந்த மே மாதம் வரையிலும் 594 கோடி பரிவர்த்தனைகள் UPI மூலமாக நடந்திருக்கின்றன. இதில் ரூ.10.4 லட்சம் கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. பணமில்லாப் பொருளாதாரத்தில் இது மிகப்பெரிய வெற்றிதான்.

நம் நாட்டில் 6.64 கோடி பேர் கிரெடிட் கார்ட் வைத்திருக்கிறார்கள். இவர்களில் ரூபே வகை கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும்பான்மை வகிக்கும் மாஸ்டர், விசா கிரெடிட் கார்டுகளுக்கும் UPI-யும் மூலம் கடன் பெறும் வசதிகள் இணைப்பு வழங்கப்பட்டால் UPI பரிவர்த்தனை இன்னும் உயரும். `Buy now pay later’ என்கிற கான்செப்ட் அடிப்படையில், கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள்.

பணம்

இந்தியாவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 26% உயர்ந்திருக் கிறது. இந்தச் சூழலில் கிரெடிட் கார்டை UPI-யுடன் இணைக்கும் ரிசர்வ் வங்கியின் திட்டத்தைப் பயனாளர்களுக்குச் சாதகமானதாகப் பார்க்கலாம்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அதாவது, மாஸ்டர், விசா கார்டுமூலம் பணம் செலுத்தும்போது, குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. அதாவது, இந்த சேவையைப் பெறுபவரிடம் இருந்து 1 அல்லது 2% கட்டணம் வசூலித்து அது சேவை தரும் நிறுவனத்துக்கு கட்டணமாகத் (Merchant Discount Rate) தரப்படும். ஆனால், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி UPI வழியான பணப்பரிவர்த்தனை செய்யும்போது எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அந்தக் கட்டணம் எவ்வளவாக இருக்கும் என இனிமேல்தான் முடிவாகும் என்பதால், கிரெடிட் காடுகள் UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதில் சுணக்கமான நிலையே காணப்படும்” என்றவரிடம், இதனால் மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா என்று கேட்டோம்.

“நமது கார்டு, மொபைலைத் திருடிவிட்டார்கள் எனில், அதைக் கொண்டு கிரெடிட் லிமிட்டில் மீதமுள்ள பணத்தைத் திருடிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. விழிப்புணர்வு இல்லாதவர்களிடம், வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, கார்டு எண், சி.வி.வி எண் உள்ளிட்டவற்றை வாங்கி, OTP-யும் வாங்கி பணத்தைத் திருடலாம். இது போன்ற மோசடிகளில் இருந்து நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு என்பதற்காக இஷ்டத்துக்கு செலவு செய்யும் மனநிலையும் பிரச்னைதான். எப்படியிருந்தாலும் அந்தப் பணத்தை நாம்தான் கட்டப்போகிறோம். இது போன்ற சில பிரச்னைகள் இதனால் ஏற்படும் பாதிப்புகளாகச் சொல்லலாம். சுய அறிவுடன் விழிப்புணர்வாகச் செயல்படுபவர்களுக்கு இதனால் பெரிய பிரச்னை எதுவும் இல்லை” எனப் பேசி முடித்தார் சுரேஷ் பார்த்தசாரதி.

தாமஸ் ஃப்ராங்கோ

மோசடிகளை எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது..!

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது நிறைய மோசடிகளை எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றார் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் ஃப்ராங்கோ.
“பொதுவாகவே UPI-ல் பாதுகாப்பு இல்லை. நிறைய பேர் மோசடிக் கும்பலால் பணத்தை இழந்திருக்கின்றனர். மோசடி செய்ய எளிதான முறையாக UPI இருக்கிறது. பென்ஷன் வாங்குகிற முதியோர்கள் பலரும் வங்கியிலிருந்து அழைப்பதாக நம்பி ஏமாந்து போகின்றனர். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஊழியர்களிடமேகூட பேசியிருக்கிறேன். அவர்களும் எளிதில் மோசடி நடப்பதற்கான சாத்தியங்கள் UPI-ல் அதிகம் இருக்கிறது என்று சொன்னார்கள். இது போன்று மோசடி புகார்கள் ஆயிரக்கணக்கில் வந்துகொண்டிருக்கின்றன. பாதிக்கப் பட்டவர்களுக்கு பணம் திரும்பக் கிடைப்பதில்லை. இந்த நிலையில், கிரெடிட் கார்டை UPI-யுடன் இணைத்தால், எளிதில் பெரும் தொகையை மோசடி செய்ய முடியும். UPI தொழில்நுட்பத் தில் மோசடி நடந்துவிடாதபடி அதை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என்றார் ஃப்ராங்கோ.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்துடன் நடப்பது அவசியம் என்பது மட்டும் நிச்சயம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.