இரட்டை மடிப்பு வலை விவகார வழக்கு; இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கடலின் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எதிர்த்து ஒன்பது பேர் சார்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், ‘தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சுருக்கு மடிப்பு வலைக்கு தடை விதித்தது சட்ட விரோதமாகும். கடலில் 12 நாட்டிக்கள் மைல்கள் தாண்டி மீன் பிடிக்க அனுமதி உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ, படகு மற்றும் வலைகளை பறிமுதல் செய்யவோ மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. அதனால் சுருக்கு மடிப்பு வலைக்கான தடையை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி போபண்ணா தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரித்து வந்தது. கடைசியாக நடந்த விசாரணையின் போது, ஒன்றிய அரசும், மாநில அரசும் இவ்வழக்கு தொடர்பாக பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான கோடைகால அமர்வு முன் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், ‘பிரதான வழக்கின் உத்தரவு வெளியாக தாமதமாகும் என்பதால், இடைக்காலமாக 3 மாதத்திற்கு மட்டும் இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் 60 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும். எனவே தமிழக அரசு பிறப்பித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கோரினார். அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘பிரதான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி போபண்ணா அமர்வு விசாரிக்கிறது. அந்த நிலையில் நாங்கள் இடைக்கால தடை விதிக்க முடியாது. நீங்கள் மேற்கண்ட அமர்வின் முன் ஆஜராக உங்களது கோரிக்கையை வைக்கலாம்’ எனக்கூறி அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.