தி.மு.க.,வில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார் – அண்ணாமலை

Annamalai says one Shinde come from DMK in BJP protest: தமிழ்நாட்டில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது. தி.மு.க.,வில் இருந்து ஒரு ஷிண்டே புறப்படுவார் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க இன்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை என பாஜக ஆர்பாட்டம் நடத்தியது.

இதையும் படியுங்கள்: ‘5% கூட உங்ககிட்ட இல்ல; தி.மு.க-வின் பி- டீம் நீங்க’: ஓ.பி.எஸ் அணி மீது ஜெயக்குமார் தாக்கு

இதில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற போராட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதேபோல், கோவையில், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரும், திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, தி.மு.க ஆட்சிக்கு வந்து 15 மாதங்களாக ஆகிவிட்டது. தி.மு.க தேர்தலுக்கு முன் 505 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. ஆனால் 15 மாதங்கள் ஆகியும் இந்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. இவர்கள் சொல்லும் விளக்கங்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் ஏற்கனவே 2 பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டனர்.

ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உங்களிடம் அதற்கு எந்த காரணமும் இல்லை. நீங்கள் மக்களை ஏமாற்றிவிட்டீர்கள். டிசம்பர் 31ம் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால் பா.ஜ.க சார்பில், ஜனவரி 1ஆம் தேதி பாதயாத்திரை துவங்கி டிசம்பர் 31ஆம் தேதி கோபாலபுரம் பகுதியில் பாதயாத்திரை முடிவடையும். ஒரு வருடம் குடும்பம் சம்பாத்தியம் அனைத்தையும் விட்டுவிட்டு பாதயாத்திரையில் கலந்துக்கொள்ள பா.ஜ.க தொண்டர்கள் தயராக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருகிறது. 2024-ல் தமிழகத்தில் நிச்சயம் 25 எம்.பி.,க்களை பா.ஜ.க உருவாக்கும். 25 எம்.பி.,க்களை நாம் உருவாக்கினால் தான் 180 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று 2026-ல் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும். அப்போதுதான் தமிழ்நாடு செய்த பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும்.

மக்கள் வைக்கும் கோரிக்கைகளை இந்த அரசு கேட்கவில்லை. பிரிட்டிஷ் அரசு கூட மக்கள் கோரிக்கைகளை கேட்டது. இதுவரை பா.ஜ.க மக்கள் கோரிக்கைக்காக 3 முறை போராட்டம் நடத்தியுள்ளது. வரும் நாட்களில் 1 வாரம் முழுக்க போராட்டம் நடத்தவும் கூட நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய அரசு இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. ஆனால் தி.மு.க அரசு குறைக்கவில்லை.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கரைந்து வருகின்றன. இரண்டரை ஆண்டுகளுக்கு முன் ஒரு சுயநலவாதியால் 3 கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தனர். தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க இருந்தும் ஆட்சி அமைக்க முடியவில்லை. அவர்களின் இரண்டு அமைச்சர்கள் பா.ஜ.க நிர்வாகிகளை எப்படி எல்லாம் கொடுமைபடுத்த முடியுமோ அப்படி எல்லாம் கொடுமை செய்தனர். உத்தவ் தாக்கரே எதையும் செய்யாமல், கண்ணை மூடிக்கொண்டு கட்டுப்படுத்தப்பட்டார். இப்போது அவர்களின் உள்துறை மந்திரி தேஷ்முக் சிறையில் இருக்கிறார். தேசியவாத காங்கிரசின் நவாப் மாலிக் சிறையில் இருக்கிறார்.

இது எல்லாம் அமலாக்கத்துறை வழக்குகள். இரண்டரை ஆண்டுகள் கழித்து அங்கு ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவை எதிர்த்து சிவசேனா – பாஜக ஆட்சியை அமைத்து இருக்கிறார். இப்போது உத்தவ் தாக்கரேவிற்கு 13 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

மகாராஷ்டிர போலீஸ் பாதுகாப்போடு ஏக்நாத் ஷிண்டே சூரத்திற்கு சென்றார். ஆட்சியில் நீங்கள் இருக்கலாம். ஆனால் உங்களுக்கே என்ன நடக்கும் என்று தெரியாது. காவல்துறையே உங்கள் பக்கம் இருக்காது. இது ராஜ தர்மம். நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டியது நடக்கும். மகாராஷ்டிரா அரசுக்கு இரண்டரை ஆண்டுகள் கழித்து அது நடந்தது.

தமிழ்நாட்டிற்கு எப்போது நடக்கிறது என்று பார்ப்போம். இன்னும் ஒரு மாதம்தான். எங்களிடம் ஒரு ஏக்நாத் ஷிண்டே இல்ல. நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க.,வில் இருந்து ஏக்நாத் ஷிண்டே புறப்பட தயாராக இருக்கிறார். உதயநிதியை அமைச்சராக்கினால் தி.மு.க.,வில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்.

சிவசேனா வேறு, தி.மு.க வேறு என்று இவர்கள் கூறுவார்கள். இரண்டும் வேறா என்பதை பார்ப்போம். தாக்கரேவின் முதல் மகன் பிந்து தாக்கரே சினிமாவில் நடிக்க முயன்றார் படம் ஓடவில்லை. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து சினிமாவில் நடிக்க முயன்றார். அவருக்கு செட்டாகவில்லை. தாக்கரேவின் இரண்டாவது மகன் குடும்பத்தில் இருந்து வெளியே இருக்கிறார். அதேபோல், கருணாநிதியின் இரண்டாவது மகன் அழகிரி குடும்பத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

மகாராஷ்டிராவில் மூன்றாவது மகன் உத்தவ் முதல்வர் ஆனார். இங்கே கருணாநிதியின் மூன்றாவது மகன் ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அங்கே ஆதித்யா தாக்கரே இளைஞரணி செயலாளராக இருந்தார். பின்னர் அமைச்சர் ஆனார். இங்கே உதயநிதி இளைஞரணியில் இருக்கிறார், அவர் அமைச்சர் ஆகும் போது கண்டிப்பாக ஒரு ஷிண்டே தி.மு.க.,வில் இருந்து வருவார். இது இயற்கை உருவாக்கிய சக்தி, என்று அண்ணாமலை பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.