10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை குவைத் மனிதாபிமான நட்புறவுச் சங்கம் நன்கொடை

உயிர்காக்கும் மருத்துவப் பொருட்களை அரசாங்கம் பேணுவதற்கு உதவுவதற்காக, குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில், குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் 10,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அவசர மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் அஹமட் அப்துல்லா அல்சரஃப் உடனான சந்திப்பின் போது, குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் யு.எல். மொஹமட் ஜௌஹர் அவர்களின் தாராளமான பங்களிப்புக்கு இலங்கை மக்களின் சார்பாக ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். மருத்துவப் பொருட்களில் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஏனைய உபகரணங்களும் உள்ளடங்கியிருந்ததுடன், அவை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸால் இலவசமாக விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டன. தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கத்தினால் குவைத் எல்லைக்கு வெளியே இத்தகைய பங்களிப்பைச் செய்ய தீர்மானித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு 81,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் விமானக் கட்டணம், உலர் உணவுகள் வழங்குதல் மற்றும் பாடசாலைக் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றின் மூலம் உதவிகளை வழங்கி வருகின்றது.

இலங்கைத் தூதரகம்,
குவைத்
2022 ஜூலை 06

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.