கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவேரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் வேகமாக நிரம்புவதால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவேரியில் திறந்துவிடப்படுகிறது. கே.ஆர்.எஸ் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 74 ஆயிரம் கன அடி நீர் காவேரியில் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணையின் மதகுகள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. கபினி அணையிலிருந்து திறந்துவிடபடும் நீரின் அளவு 23 ஆயிரம் கன அடியிலிருந்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளிலிருந்து ஒட்டு மொத்தமாக 1 லட்சம் கன அடி நீருக்கு மேல் வெளியேற்றப்படுவதால் காவேரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஓகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப் பயனிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுருக்கிறது. மேலும் பரிசல்களை இயக்கவும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
