உதய்பூரில் தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த மும்பை சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததாக காஷ்மீரை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த தையல் கடைக்காரர் கன்னையா லாலை கடந்த மாதம் 28-ம் தேதி இரண்டு பேர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அதனை வீடியோவும் எடுத்து அவர்கள் வெளியிட்டனர்.
முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் கன்னையா லாலை தாங்கள் கொலை செய்ததாக அவர்கள் வீடியோவில் கூறினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 3 பேர் என 5 நபர்களை போலீஸார் கைது செய்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளும் தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கன்னையா லால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவரது வாட்ப் அப் எண்ணுக்கு கடந்த சில தினங்களாக கொலை மிரட்டல் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன. மேலும், பாலியல் ரீதியான மிரட்டலும் அவருக்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக அவர்கள் மும்பை காவல்துறையில் புகார் அளித்தனர். இதன்பேரில், சைபர் பிரிவின் உதவியுடன் புலனாய்வு செய்ததில், காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் இருந்து இந்த கொலை மிரட்டல் வந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காஷ்மீருக்கு நேற்று முன்தினம் சென்ற மும்பை தனிப்படை போலீஸார், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஃபயாஸ் அகமது பட் (30) என்பவரை கைது செய்தனர். அவரை மும்பைக்கு அழைத்து வந்து விசாரணை நடைபெற்று வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
