சேலம், அம்மாபேட்டை கொங்கு திருமண மண்டபத்தில் தி.மு.க., இளைஞரணி சார்பாகத் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான இராஜேந்திரன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க-வின் கழக கொள்கைப்பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். மாநகர எல்லையில் கூட்டம் நடைபெறுவதால், தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர்கள், மாநகர கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால், கூட்டம் தொடங்கியதிலிருந்து மேயர் அரங்குக்குள் செல்லவில்லை. எம்.எல்.ஏ இராஜேந்திரன் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் வி.ஐ.பி நாற்காலி அமைத்துவிட்டு மேயருக்கு நாற்காலி அளிக்கவில்லையாம். இதனால் மன வருத்தத்தில் மேயர் தன் ஆதரவாளர்களுடன் அரங்குக்கு வெளியில் போய் அமர்ந்துவிட்டார் என்கிறார்கள். இதைக் கண்ட தி.மு.க., தொண்டர்கள், “மேயர் ஏன் வெளியில வந்துட்டாரு… கூட்டத்தைப் புறக்கணித்து விட்டாரா, அல்லது எம்.எல்.ஏ., வரக்கூடாதுணு சொல்லிட்டாரா” என முணுமுணுக்கத் தொடங்கி விட்டனர்.

இந்தச் சம்பவம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து தி.மு.க-வைச் சேர்ந்த சீனியர்களிடம் கேட்டோம். “மேயர் ராமச்சந்திரன் என்னதான் எம்.எல்.ஏ-வால் அடையாளம் காட்டப்பட்டாலும், சில இடங்களில் மேயருக்கான மரியாதையை அவருக்குக் கொடுக்கணும். அதை எம்.எல்.ஏ., கொஞ்சம்கூட கொடுக்கமாட்ராரு. கொங்கு மண்டலத்துல நடக்கிற கூட்டத்திற்குச் சென்னை மேயரையும், திருச்சி மேயரையும் பேச வச்சுட்டு… சேலத்திற்கு நகர்மன்றத் தலைவரை பேச வச்சிருக்காரு எம்.எல்.ஏ., இராஜேந்திரன். இதுமாதிரி மேயரை பல இடங்களில் புறக்கணிப்பதால் அவர் பொம்மை போன்றே வலம் வந்து கொண்டிருக்கிறார்” என்றனர்.
இந்த உட்கட்சிப் பூசல் சேலம் மாவட்ட தி.மு.க-வில் அரசல் புரசலாகப் பேசப்பட்டு வருகிறது.