இலவச பொருட்களை வழங்கும் கலாசாரம் வளர்ச்சிக்கு ஆபத்து – பிரதமர் மோடி

ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், புதிதாக நான்கு வழி விரைவுச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி இந்த சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின் பணிகள் தொடங்கப்பட்டு 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

சுமார் 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் செலவில் 296 கிலோ மீட்டர் நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. சித்ரகூடில் உள்ள கோண்டா கிராமத்தில் உள்ள என்.எச்-35ல் தொடங்கும் இந்த சாலையானது, பண்டா, மஹோபா, ஹமிர்பூர், ஜலான், ஆரையா மற்றும் எட்டாவா ஆகிய 6 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. அதன்பின், ஆக்ரா – லக்னோ விரைவு சாலையுடன் இணைகிறது.

உத்தர பிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விரைவுச்சாலை பின்னர் ஆறு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புந்தேல்கண்ட் விரைவு சாலை தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகருக்கு விமானத்தில் இன்று வந்திறங்கிய பிரதமர் மோடியை, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் ஜலான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.

நிகழ்ச்சி மேடையில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி, ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் நான்கு வழி விரைவுச் சாலையை திறந்து வைத்தார். இதன் பின்னர் அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இரண்டு விசயங்கள் சரி செய்யப்பட்டு விட்டால், பின்னர் அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் அந்த மாநிலம் போராட முடியும் என நான் அறிவேன். சட்டம் மற்றும் ஒழுங்கு, இணைப்பு ஆகிய இரண்டையும் நாங்கள் மேம்படுத்தி உள்ளோம். சட்டம் மற்றும் ஒழுங்கு மேம்பட்டு உள்ளது. அதே போன்று, நகரங்களை இணைத்தலும் நடந்துள்ளது.

இந்த விரைவுச் சாலையானது, தொடர்ச்சியான இணைப்பு மற்றும் அதனால் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த பகுதியில் ஏற்பட உறுதி செய்யும். இந்த விரைவு சாலையால், இந்த பகுதியில் தொழில் வளர்ச்சி அபரிமித அளவில் இருக்கும். இதுவே மோடி மற்றும் யோகியின் அரசு. நாங்கள் நகரங்களுக்கு மட்டுமின்றி கிராமங்களுக்கும் வளர்ச்சியை எடுத்து செல்வோம்.

ஓட்டுகளை பெறுவதற்காக இலவச பொருட்களை வழங்கும் அரசியல் கட்சிகளின் கலாசாரம் ஆபத்து நிறைந்தது. நாட்டின் அரசியலில் இருந்து அவை நீக்கப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்த கலாசாரம் மிக ஆபத்து நிறைந்தது. இந்த கலாசாரத்துடன் இணைந்திருப்பவர்கள், புதிய விரைவுச் சாலைகளை, புதிய விமான நிலையங்களை அல்லது பாதுகாப்பு பகுதிகளை உங்களுக்காக கட்டமைக்கவே மாட்டார்கள். இந்த எண்ணங்களை நாம் வீழ்த்த வேண்டும்.

மாநிலங்கள் மற்றும் மத்தியில் உள்ள இரட்டை இயந்திரம் கொண்ட அரசாங்கங்கள், இலவச பொருட்கள் வினியோகம் தவறு என குறிப்பிடவில்லை. ஆனால், மாநிலத்தின் வருங்கால மேம்பாட்டுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என கூற வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.