நீலகிரி: வழக்கத்தை விட 91% கூடுதல் மழை; அபாயகர மரங்கள் அகற்றம்! – அமைச்சர்கள் நேரில் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் இடைவிடாது தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்தும் மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் பல இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டு வருகிறது. மீட்பு குழுவினர் உடனடியாக சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆபத்தான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 150 நபர்களை 35 மீட்பு முகாம்களில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

ministers

மேலும், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மழை பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக பேரிடர் தடுப்பு மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன், மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நீலகிரிக்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுடன் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப்பின் செய்தியளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், “நீலகிரியில் இந்த முறை இயல்பை காட்டிலும் 91 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மழைக்காலங்களில் மண் சரிவுகள் ஏற்படாமல் இருக்க தடுப்பு சுவர்கள் கட்டுவது, நீரோடைகளை தூர் வாருவது மற்றும் சிறிய பாலங்களை மாற்றி பெரிய பாலங்கள் கட்டுவது குறித்து திட்ட மதிப்பீடு தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பீடு தயார் செய்ததுடன் தமிழக முதல்வரிடம் வழங்கப்படும். இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 163 இடங்களில் இருந்த அபாயகரமான மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், மழையால் விழுந்த 50 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. வரும் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்களை குறைக்கவும் ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மின்சாரத்துறை ஊழியர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த நிலையில், ஊட்டி தலைக்குந்தா பகுதியில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டதை ஆய்வு செய்த மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இடைவிடாது காற்று மழையில் குளிரிலும் நடுங்கியபடி மின் மின் கம்பிகளை சீரமைத்து வரும் களப்பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் மின்வாரிய ஊழியர்களுடன் குழு புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். மேலும் கடைநிலை ஊழியர்கள் சிலர் அமைச்சருடன் செல்ஃபி எடுக்க விருப்பம் தெரிவித்ததும் அதற்கு சம்மதித்து அவர்களுடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.