மை டியர் பூதம்: பிரபுதேவாவின் கிளாஸ் நடிப்பு; ஆனால் இந்தப் பிரச்னையை இப்படித்தான் அணுகவேண்டுமா?

பூதா பூதங்களின் தலைவனுக்கும் வாய் பேசச் சிரமப்படும் ஒரு சிறுவனுக்குமான பாசப்போராட்டமே இந்த `மை டியர் பூதம்’.

பூதா பூதங்களின் தலைவராக இருக்கிறார் கர்கிமுகி. தன் மகன் செய்யும் ஒரு விபரீதத்தால், கர்கிமுகி ஒரு முனிவரின் சாபத்துக்கு ஆளாகிறார். சிலையாக மாறி பூமிக்குள் புதையுமாறு சபிக்கப்படுகிறார். இன்னொரு பக்கம் வாய் பேசச் சிரமப்படும் சிறுவனான திருநாவுக்கரசை அவன் சுற்றமும் நட்பும் நக்கல் அடிக்கிறது. இழிவாகப்பேசுகிறது. அப்போது சிலையான கர்கிமுகியை எதேச்சையாய் சிறுவன் தொட்டுவிட, நாம் எதிர்பார்த்தது போலவே பூதம் கர்கிமுகி வெளியே வந்துவிடுகிறார்.

மை டியர் பூதம்

அடுத்ததாக நாம் நினைக்கும் காட்சிகள் நிறையப் படத்தில் வருகின்றன. சிறுவனுக்கு இருக்கும் பிரச்னையை கேலி செய்யும் நபர்களை ஜாலியாக வெளுத்துவாங்குகிறார் கர்கிமுகி. தன் சொந்த உலகத்துக்கு கர்கிமுகி திரும்பச் சென்றாரா, சிறுவனின் பேச்சுக் குறைபாடு என்ன ஆனது என்பதாக விரிகிறது இந்த ‘மை டியர் பூதம்’.

பூதமாக பிரபுதேவா. செம்ம ரகளை செய்து திரை முழுவதையும் அவரே ஆக்கிரமிக்கிறார். உணர்வுப்பூர்வமான காட்சிகளாகட்டும், பூதமாகச் செய்யும் சேட்டைகளாகட்டும் பிரபுதேவா ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்து இருக்கிறார். அந்த ரப்பர் உடலுடன் சின்ன சின்ன நடனங்கள் என எல்லாமே பக்கா! அதே போல, குழந்தைகளின் சூப்பர்ஹீரோக்களாக மாறி சிரிப்பு மூட்டும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.

சிறுவனாக அஷ்வந்த். தன் பிரச்னைக்கான தீர்வு ஏதுவெனத் தெரியாத இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். தாயாக ரம்யா நம்பீசனும், ஆசிரியராக பிக் பாஸ் சம்யுக்தாவும் வருகிறார்கள். பெரிதாக எந்த வேலையும் அவர்கள் வேடத்தில் இல்லை. தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவர் கு.சிவராமன் இருவரும் அவர் அவர்களாகவே கௌரவ வேடத்தில் தோன்றியிருக்கிறார்கள்.

மை டியர் பூதம்

பார்த்துப் பழகிய அரேபியப் பூதக் கதைதான் என்றாலும், அதில் நம் மண்ணின் தன்மைக்கு ஏற்ப பல விஷயங்களைப் புதிதாகச் சேர்த்திருக்கிறார்கள். அந்த வகையில் இயக்குநருக்கு ஒரு பாராட்டு. இமான் இசையில் ‘மாஸ்டர் ஓ மை மாஸ்டர் ‘ பாடல் மட்டும் தாளம் போட வைக்கிறது. பென்னி தயால் குரலுக்கு ரப்பர் போன்ற உடலுடன் பிரபுதேவா ஆடுவது பார்க்கச் சிறப்பாக இருந்தது.

படத்தின் பெரும்பகுதி சிறுவன் பேசுவதற்குச் சிரமப்படுத்துவது குறித்தே நகர்கிறது. ஆனால், அதை மிகவும் முதிர்ச்சியற்ற தன்மையுடன் அணுகியிருக்கிறார் இயக்குநர். பேசச் சிரமப்படுவது வைத்து பலர் நக்கல் அடிக்கிறார்கள் என்பதைச் சிரிப்பதற்கான காட்சியாக மாற்றியிருப்பது ஒரு கட்டத்துக்கு மேல் எரிச்சலை உண்டாக்குகிறது. மளிகைக் கடைக்காரர், பள்ளி ஆசிரியர், உடன் படிக்கும் சிறுவர்கள் என அந்தக் குழந்தை சந்திக்கும் ஒவ்வொருவரும் அந்தக் குழந்தையின் பேச்சு குறித்த பிரச்னையை நக்கல் அடிக்கிறார்கள். இதற்கெல்லாம் உச்சமாக அந்தக் குழந்தையின் தாயும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் அவராக சில விஷயங்களைச் செய்துவிடுவதாக ‘நகைச்சுவையாக’க் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

மை டியர் பூதம்

உண்மையில் நாம் ஒரு சமூகமாகப் பல நூறு அடிகள் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இன்னும் இப்படியான மனரீதியான பிரச்னைகளை வைத்தெல்லாம் காமெடி என்கிற பெயரில் காட்சியமைப்பதை எப்போது நிறுத்தப்போகிறோம் எனத் தெரியவில்லை.

ஒரு பள்ளியில் பிற மாணவர்கள் கிண்டலடித்தால்கூட, புரியாத சிறுவர்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பள்ளி ஆசிரியர் சம்யுக்தா தொடங்கி தலைமை ஆசிரியர் வரை சிறுவனை மட்டமாகப் பார்ப்பது, கீழாக நடத்துவது எந்தப் பள்ளியில் இப்படி எல்லாம் நடக்கும் என்று புரியவில்லை. அதே போல், படத்தின் கதை முடிந்த பின்னரும், இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்தால்தான் திரைப்படம் என யாரோ சொல்லிவிட்டதால், எதற்கென்றே தெரியாமல் ‘மெடிக்கல் மாபியா’ ரேஞ்சுக்குச் சில காட்சிகளைத் திணித்து இருக்கிறார்கள். அவை படத்துடன் சுத்தமாக ஒட்டவில்லை.

குழந்தைகளுக்கான படங்களை இன்னும் பொறுப்புடன் படைப்பாளிகள் எடுக்க வேண்டும் என்பதையே இந்த `மை டியர் பூதம்’ உணர்த்துகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.