புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அதனால் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் வேட்டாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீப் தன்கர், அங்கு எம்எல்ஏ.,வாகவும், மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இவர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று டெல்லி வந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாஜக தேசியத் தலைவர் நட்டா போன்றோரை தன்கர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குடியரசுத் தலைவர் அலுவலகம் அறிவித்துள்ளது.