புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை பா.ஜ.க அறிவித்துள்ளது.
பா.ஜ.க ஆட்சிமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின்கட்ரி, ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக, மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை நிறுத்த ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்பின் ஜெகதீப் தன்கரை, குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு தே.ஜ கூட்டணியின் வேட்பாளராக பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அதனால் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் வேட்டாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீப் தன்கர், அங்கு எம்எல்ஏ.,வாகவும், மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இவர் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘அரசியல் சாசனத்தை நன்கு அறிந்தவர் ஜெகதீப் தன்கர். சட்ட விவகாரங்களிலும் அவர் புலமை பெற்றவர். அதனால் மாநிலங்களைவைக்கு அவர் மிகச்சிறந்த தலைவராக இருந்து, நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், அவை நடவடிக்கைகளை வழிநடத்துவார்’’ என கூறியுள்ளார்.