எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும் வரை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று கூறப்பட்ட போதிலும், மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் காத்துக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
வரிசையில் நிற்கும் வாகனங்கள் அகற்றப்பட்டதன் பின்னரே ,அந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…
எதிர்கால எரிபொருள் விநியோகத்தில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை மற்றும் வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஆகிய இரண்டும் கட்டாயமாக்கப்படும்.
அத்துடன் புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும். புதிய முறையை நடைமுறைப்படுத்துவது இலகுவான காரியமல்ல என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் சில மாதங்களில் இந்த எரிபொருள் விநியோக திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைவருக்கும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது முக்கியம். இதனை சுமுகமாக நடைமுறைப்படுத்த பொதுமக்களின் ஆதரவு தேவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக தேசிய எரிபொருள் அட்டை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது . தற்போது 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் அதனைப் பெற்றுள்ளார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.