மதுரையில் ஆடம்பர வாழ்க்கைக்காக விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள், செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த இளம் சிறார்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து செல்போன், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள காட்டு பிள்ளையார் கோவில் பகுதியில் அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தகராறில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். போலீசை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறது. அதில் ஒருவரை விரட்டி பிடித்து விசாரித்தபோது அவர் செல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் 6 பேர் கொண்ட கும்பல் எனவும் சொகுசு வாழ்க்கைக்காக செல்போன், இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்ததும், செல்லூர் காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் அவர்கள்மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
திருடும் செல்போன்கள், இருசக்கர வாகனங்களை விற்று கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களுக்குச் சென்று ஆடம்பரமாக சுற்றி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 10 செல்போன்கள் மற்றும் 9 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
