தமிழகத்தில் குரூப் 4 தேர்வு: 7300 இடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி

சென்னை: நாளை மறுநாள் நடைபெறவுள்ள 7300 இடங்களுக்கான குரூப் 4 தேர்வை தமிழகம் முழுவதும் 22 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.

தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.

இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் நிலை-1, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 7301 இடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வை 22,02,942 பேர் எழுதவுள்ளனர். இதில் ஆண்கள் 9,35,354 பேர். பெண்கள் 12,67,457 பேர்.

தமிழகம் முழுவதும் 7689 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 503 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை தேர்வு நடக்கும். மொத்தம் 300 மதிப்பெண்களைக் கொண்டதாக வினாத்தாள் அமைக்கப்பட்டிருக்கும்.

தேர்வுப் பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு மையங்களை நேரில் சென்று பார்வையிட சிறப்பு அலுவலர்களைக் கொண்ட 534 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு பணியில் 7689 பணியாளர்கள் ஈடுபடுத்தபடவுள்ளனர். 1,10,150 பேர் தேர்வு கூட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.