திருச்சி கலையரங்கம் வளாகத்தில் மாவட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். விழாவில் 3,175 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியே 15 லட்சம் மதிப்பில் வேளாண் பொருட்கள், கருவிகள், நரிக்குறவர்களுக்கு பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கடந்த ஆறு மாத காலத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என அரசு வற்புறுத்துகிறது. செய்வதும் செய்யாமல் இருப்பதும் விவசாயிகளின் நிலைப்பாடு. சோலார் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது என குறிப்பிட்டார்.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நெல் குவிண்டாலுக்கு ஏற்கனவே ரூ.90 உயர்த்தி வழங்கி வரும் நிலையில், நெல் கொள்முதலுக்கு 100 ரூபாய் ஒன்றிய அரசு கூடுதலாக வழங்கி உள்ளது. தமிழக முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது போல் வருகிற செப்டம்பர் முதல் நெல் கொள்முதல் செய்யப்படும். தமிழக அரசு நெல் கொள்முதலுக்கு குவிண்டாலுக்கு கூடுதலாக விலை கொடுப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார் என வேளாண் துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, பயிர் காப்பீட்டில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்ல முடியாது. நானும் விவசாயி வேளாண் துறை அமைச்சரும் விவசாயி இருவரும் பயிர் காப்பீடு செய்கிறோம். தஞ்சை மாவட்டத்தில் முழுவதும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதை ஆர்வமாக கொண்டுள்ளனர்

கிளை வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை என்ற விவசாயிகளின் குற்றச்சாட்டுக்கு காவிரியில் 40 ஆயிரம் கன அடி நீரும், கொள்ளிடத்தில் 80 ஆயிரம் கனவில் சென்றது. புள்ளம்பாடி வாய்க்கால் திறக்கப்பட்டதன் மூலம் 28 ஏரிகளில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ஒருபோகம் மட்டுமே விவசாயம் நடைபெறுவதால் அவர்களுக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் கொடுக்கப்படும், இரண்டாம் போக சாகுபடிக்கு அனைத்து கிளை வாய்க்கால்களிலும் தேவையான அளவு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், அரசு அதிகாரிகள், திரளான விவசாயிகள், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, சேர்மன் துரைராஜ், கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், பைஸ் அகமது, விஜயா ஜெயராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ், இளங்கோ, ஒன்றியச்செயலாளர் கருப்பையா, கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி வரவேற்றார். முடிவில் வேளாண் அதிகாரி மல்லிகா நன்றி கூறினார்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil