நீங்கள் எதைச் செய்தாலும், அதைப் புதுமையாகச் செய்தால், உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதுதான் இன்றைய பிசினஸ் ரகசியம். இதை நன்கு உணர்ந்த பல நாட்டு அரசாங்கங்கள் தங்கள் நாட்டில் புதுமையைப் படைப்பவர் களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், நம் நாட்டில் புதுமை படைக்க விரும்புகிறவர்களுக்கு மத்திய அரசாங்கம் பல வகையிலும் உதவி செய்து வருவதுடன், இந்த விஷயத்தில் எந்தெந்த மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை எடுத்துச் சொல்ல இண்டெக்ஸ் ஒன்றை உருவாக்கி, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

இந்த இண்டெக்ஸுக்கு `இன்னோவேஷன் இண்டெக்ஸ்’ என்று பெயர். 2021-ம் ஆண்டுக்கான இன்னோவேஷன் இண்டெக்ஸ் குறித்த அறிக்கையை கடந்த 21-ம் தேதி வியாழக்கிழமை நிதி ஆயோக் நிறுவனம் வெளியிட்டது. மத்திய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஆய்வு செய்து, இந்த இன்னோவேஷன் இண்டெக்ஸ் வெளியிடப்படுகிறது.
இந்தப் பட்டியலில் தமிழகம் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் நான்கு இடங்களில் கர்நாடகா, தெலங்கானா, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் முதலிடத்தில் உள்ளது. அதே போல், யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து டெல்லி, அந்தமான், புதுச்சேரி மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தக் குறியீடு 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை தனித்துவமிக்க 66 குறிகாட்டிகளை (Unique indicators) அடிப்படையாகக் கொண்டு இந்த இண்டெக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. தவிர, முக்கியமான 7 அளவீடுகளைக் கொண்டும் இந்த இண்டெக்ஸ் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த 7 அளவீடுகளில் 5 அளவீடுகள் `செயல்படுத்த வைப்பவையாக’வும் (enabler), 2 அளவீடுகள் `செயல்பாட்டை’ (Performance) உணர்த்துபவையாகவும் உள்ளன. மனிதவளம், முதலீடு, அறிவுத் தொழிலாளர்கள், வணிகச் சூழல், பாதுகாப்பு மற்றும் சட்டச் சூழல் ஆகியவற்றைக்கொண்டே இந்தக் குறியீடு பட்டியளிடப்பட்டுள்ளது.
இந்த இன்னோவேஷன் இண்டெக்ஸின்படி, முக்கியமான மாநிலங்களில் கர்நாடக மாநிலம் முதலிடத்தையும், தெலங்கானா மற்றும் ஹரியானா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு ஐந்தாவது மாநிலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இண்டெக்ஸில் முதலிடத்தில் உள்ள கர்நாடகா 18.01 புள்ளிகளையும் நான்காம் இடத்தில் உள்ள மஹாராஷ்டிரா 16.06 புள்ளிகளையும் பெற்றுள்ளன. தமிழகம் 15.69 புள்ளிகளைப் பெற்றதால் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய நிதி ஆயோக்கின் உறுப்பினர்களுள் ஒருவருமான வி.கே.சரஸ்வத், “இந்த இன்னோவேஷன்கள் எல்லோரும் அணுகக்கூடிய வகையிலும், சமூக சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் உதவியாகவும் இருக்க வேண்டும் என்று எல்லா மாநிலங்களையும் நான் ஊக்குவிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், பல மாநிலங்களில் முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்ட போதிலும், அவற்றுக்கு காப்புரிமை பெற விண்ணப்பிக்கப்படாததால், அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. உதாரணமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான நபர்கள் முனைவர் பட்டம் பெற சேர்க்கை நடைபெற்றிருக்கிறது. ஆனால், இவர்களின் பல கண்டுபிடிப்புகள் பேட்டண்டுகளாகத் தாக்கல் செய்யப்பட வில்லை என்பதால், இந்த எண்ணிக்கை குறியீட்டில் பிரதிபலிக்கவில்லை.

இந்தக் குறியீட்டின்படி பார்க்கும் போது, ஒட்டு மொத்த செயல்திறன் குறைவாக இருந்தாலும், உலகளாவிய இன்னோவேஷன் குறியீட்டில் 25-வது இடத்துக்குள் நுழையும் லட்சியத்துடன் நாம் இருக்கிறோம்” என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
கடந்த 2021-ம் உலகளாவிய இன்னோவேஷன் குறியீட்டில் 60-வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்த 2021-ம் ஆண்டு 46-வது இடத்தைப் பிடித்து முன்னேறியுள்ளது. மேலும், மத்திய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலும், கீழ்-நடுத்தர-வருமான நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது.
இந்த இன்னோவேஷன் இண்டெக்ஸில் இந்தியா மட்டுமல்ல, நம் தமிழகமும் இன்னும் பெரிய அளவில் வளர்ச்சி காண வேண்டியுள்ளது.