திருமலை: திருமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து தர்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக நாட்டுப்புற கலைகளைப் பாதுகாக்கவும், அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமலையில் நடைபெற்று வந்த அகண்ட ஹரிநாம சங்கீர்த்தனை, கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக மேலாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த சங்கீர்த்தனை நிகழ்ச்சி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. பல்வேறு இடங்களில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் திருமலைக்கு வந்து அன்னமய்யா, புரந்தரதாசர் ஆகியோரின் ஆன்மிக பஜனைகளையும், கீர்த்தனைகளையும் பாட உள்ளனர். இவர்களுக்கான பயண கட்டணம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட உள்ளது. இந்த பஜனை குழுக்களுக்காக திருமலையில் ஒதுக்கப்பட்டு உள்ள இடங்களின் விவரங்கள் தேவஸ்தான இணையதளமான www.tirumala.org-ல் வெளியிடப்பட உள்ளது. திருமலை, பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான கோயில்களில் நடைபெறும் உற்சவங்களில் இந்த குழுக்களுக்கு நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
