புதுடெல்லி: பிரதமரின் விவசாயிகள் துன்புறுத்தல் திட்டத்தினால் விவசாயிகள் அல்லல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘பிரதமரின் விவசாயிகள் துன்புறுத்தல் திட்டம்: உயிரிழந்த விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் இல்லை. விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்கள் கிடையாது. விவசாயிகளின் கடன்கள் அல்ல நண்பர்களின் கடன்கள் தள்ளுபடி. சரியான குறைந்தபட்ச ஆதார விலை குறித்து பொய் வாக்குறுதி. பயிர் காப்பீடு என்ற பெயரில் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருமானம். விவசாயிகளுக்கு 2022ம் ஆண்டில் வருமானம் இரண்டு மடங்காகும் என்று பிரதமர் கூறினார். ஆனால் அவர்களது துன்பம் தான் இரண்டு மடங்காக ஆகியுள்ளது’ என்று விமர்சித்துள்ளார்.
