சில குழந்தைகள் இரவில் உறங்கும்போது படுக்கையை ஈரமாக்கிவிடுவதுண்டு. இதனால் பெற்றோருக்கு சில நேரங்களில் கோபம் வரக்கூடும். ஆனால், மத்தியப்பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்துள்ள காரியம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் வசிப்பவர் சங்கமித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அச்சிறுமிக்கு 9 வயதாகிறது. இரவில் உறங்கும்போது அச்சிறுமி படுக்கையை ஈரப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த சங்கமித்ரா, அக்குழந்தையை அடித்ததோடு, பிறப்புறுப்பில் சூடுபோட்டுள்ளார். இதனால் சிறுமிக்கு பிறப்புறுப்பின் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கரம் குறித்து, பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தெரியவர, அவர்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். உடனே போலீஸுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுமிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். இந்தக் குற்றம் தொடர்பாக `போக்சோ’ சட்டம் உட்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் சங்கமித்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியிடம் வாக்குமூலம் வாங்கிய பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாநில குழந்தைகள் நலக் கமிட்டிக்கும் புகார் வந்தள்ளது. அக்கமிட்டியும் தனியாக இது பற்றி விசாரித்து வருகிறது.
இது பற்றி கமிட்டியின் தலைவர் பல்லவி கூறுகையில், `சிறுமியின் பிறப்புறுப்பில் பலத்த காயங்கள் உள்ளன. அதோடு சிறுமியின் தலையில் சிறிது முடி பிடுங்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் உடம்பு முழுக்க நகத்தால் கீறிய காயங்கள் இருக்கிறது. சிறுமியின் உடல்நிலையைப் பார்க்கும்போது அப்பெண் அக்குழந்தையை, வக்கிரமான மனநிலையோடு தத்து எடுத்திருப்பார் என்று தெரிகிறது. கொடுமை செய்வதில் அனைத்து எல்லையையும் அப்பெண் மீறி செயல்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளர்.

போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தாலும், இன்னும் சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்யவில்லை. சிறுமியை மேற்கொண்டு அப்பெண்ணிடம் ஒப்படைக்காமல் குழந்தைகள் மையத்தில் சேர்ப்பது குறித்து போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.