பெங்களூரு ; ”காங்கிரசின் சண்டை வீதிக்கு வந்துள்ளது. வீட்டுக்குள் முடிவு செய்ய வேண்டிய விஷயம், வீதிக்கு வந்துள்ளது,” என வருவாய்த்துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.பெங்களூரில், நேற்று அவர் கூறியதாவது:காங்கிரசில் மேலிடம் உள்ளதா, இல்லையா என்பதே தெரியவில்லை. அந்த கட்சியின் எம்.எல்.ஏ., ஒருவர், மாநில காங்., தலைவருக்கு சவால் விடுகிறார்.
எம்.எல்.ஏ., ஜமீர் அகமது கான் பின்னால் பெரியவர் இருக்கிறார். எனவே ஜமீர் பேசுகிறார். உயிருள்ள வரை பேசுவதாக, மாநில தலைவருக்கே சவால் விடுகிறார்.பஞ்சாபில் ஒரு சித்து, கர்நாடகாவில் ஒரு சித்து இருக்கிறார். இவர்களின் சண்டையால், காங்கிரஸ் உடைந்துள்ளது. இருவரின் சண்டை, மூன்றாமவருக்கு லாபம் என்பதை போன்று ஆகியுள்ளது. அந்த கட்சியில் உட்கட்சி பூசல் உள்ளது.காங்கிரசின் சண்டை வீதிக்கு வந்துள்ளது. வீட்டுக்குள் முடிவு செய்ய வேண்டிய விஷயம், வீதிக்கு வந்துள்ளது. கொரோனா தொற்றால், மக்கள் அவதிப்பட்டனர். வெள்ளப்பெருக்கால் சேதம் ஏற்பட்டது. காங்கிரசின் எந்த தலைவராவது, பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்தித்தனரா. முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தனரா.
நாங்கள் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நிவாரணம் வழங்குகிறோம்.சித்தராமையா, சிவகுமார், பரமேஸ்வரர், எம்.பி.பாட்டீல், மல்லிகார்ஜுன் கார்கே என, பல தலைவர்கள் ஒவ்வொரு ஜாதியை வைத்துக்கொண்டு பேசுகின்றனர். ஜாதிகளுக்கு மதிப்பில்லையா. நானும் ஒக்கலிகர். எங்கள் சமுதாயத்துக்கு மதிப்பில்லையா?கெம்பேகவுடா, குவெம்பு எப்போதும் ஜாதியை பொருட்படுத்தியதில்லை. கெம்பேகவுடா அனைத்து ஜாதிகளுக்கும் பேட்டைகள் அமைத்தார். அனைத்திலும் ஜாதியை கொண்டு வருவதை, காங்கிரஸ் நிறுத்த வேண்டும்.மக்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர் முதல்வராவார். அவர்களே முதல்வரை தேர்ந்தெடுத்தனர். ஜாதிக்கொருவரை முதல்வராக்க முடியாது.
இந்திய அரசியலமைப்பின் படி, முதல்வர் தேர்வு செய்யப்படுவார். ஒக்கலிகர் விஷயத்தில், எல்லைக் கோட்டை தாண்டக்கூடாது.முன்னாள் முதல்வர் வீரேந்திர பாட்டீல் விஷயம், கவனத்தில் இருக்கட்டும். அவர் பின்னால் யாரும் நிற்கவில்லை. ஜமீர் பேச்சின் பின்னால், சித்தராமையா உள்ளார். இது தனது கடைசி தேர்தல் என கூறுகிறார். கடைசி பந்து சிக்சர் அடிக்க வேண்டும். எனவே அதுபோன்று பேசுகிறார்.காங்கிரசின் உட்கட்சி பூசலால், இந்த கட்சி கவிழும். சித்தராமையாவுக்கு ஆதரவாக, பலர் பேட்டிங் செய்கின்றனர். சிவகுமார் பின்னால் யாருமில்லை. எனவே தனக்கு ஆதரவாக, தானே பேட்டிங் செய்கிறார். காங்., மேலிடத்தின் சூழ்நிலையும் இதுதான்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement