புதுடெல்லி: யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான மனுவை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி நடத்தி வந்த சிவசேனா கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, அக்கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே பாஜ உடன் கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார். அவர் சிவசேனா கட்சியையும் கைப்பற்ற திட்டமிட்டு வருகிறார். கட்சியில் அதிகப்படியான பெரும்பான்மை தனக்கு இருப்பதால் சிவசேனா கட்சியை தனக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதி இருந்தார். ஷிண்டேவின் கோரிக்கையை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், யார் உண்மையான சிவசேனா கட்சியை நிர்வகிப்பவர்கள் என்ற ஆவணங்களை ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே ஆகிய இரு தரப்புக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில், ‘எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. அதனால் அந்த வழக்கில் ஒரு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தேர்தல் ஆணையத்தில் உள்ள மனுவை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
