'முதலைகள் உங்களை கடிக்கும்..!' – பாஜகவுக்கு மம்தா பானர்ஜி வார்னிங்!

மேற்கு வங்க மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்துத் தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த முறைகேட்டில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து, பார்த்தாவின் உதவியாளர் அர்பிதா பானர்ஜி வீட்டில் நடந்த சோதனையில் 21.90 கோடி ரூபாய் பணம், நகை, செல்போன்கள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர். இதையடுத்து, சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியை, கடந்த 23 ஆம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் மாநில அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் பார்த்தா சாட்டர்ஜி நலமுடம் இருப்பதாக கூறினர். இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கொல்கத்தா அழைத்து வரப்பட்ட அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் அமலாக்கத் துறையினர் இன்று விசாரணையை தொடங்க உள்ளனர். பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை வரும் 3 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது:

நாட்டின் மிகச்சிறந்த நம்பர் 1 மருத்துவமனையான எஸ்எஸ்கேஎம்- இல் (மேற்கு வங்க மாநில அரசின் மருத்துவமனை) பார்த்தா சாட்டர்ஜி அனுமதிக்கப்பட்டிருந்த போது மத்திய அரசுடன் தொடர்பில் உள்ள மருத்துவமனைக்கு (எய்ம்ஸ் மருத்துவமனை) அவரை அமலாக்கத் துறை கொண்டு சென்றது ஏன்?

இஎஸ்ஐ மருத்துவமனை, கமண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாதது ஏன்? இதன் நோக்கம் என்ன? இது மேற்கு வங்க மக்களை அவமதிக்கும் செயல் இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? மத்திய அரசு நிரபராதி மற்றும் அனைத்து மாநிலங்களும் திருடர்களா? மாநிலங்களால் தான் நீங்கள் (பாஜக) மத்தியில் உள்ளீர்கள்.

மகாராஷ்டிர மாநிலத்தால் இந்த முறை எதிர்த்து சண்டையிட முடியவில்லை. மகாராஷ்டிராவிற்கு அடுத்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் என்று கூறிகின்றனர். இங்கு வர முயற்சித்து பாருங்கள். வங்காள விரிகுடாவை நீங்கள் கடக்க வேண்டும். முதலைகள் உங்களை கடிக்கும். சுந்தரவனக்காடுகளில் வங்கப்புலிகள் உங்களை கடிக்கும்.

வடக்கு வங்காளத்தில் யானைகள் உங்களை புரட்டும். மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எனது கட்சியை உடைத்து விடலாம் என பாஜக நினைத்தால் அது தவறு. குறிப்பிட்ட காலத்திற்கும் உண்மை நிச்சயம் வெளி வரும். நான் யாரையும் விடவில்லை. யாரேனும் திருடனோ, கொள்ளைக்காரனாகவோ இருந்தால், அவர்களை நான் விடுவதில்லை. நான் எனது சொந்த மக்களையே கைது செய்துள்ளேன். எனது எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்களையும் தப்பவிடுவதில்லை. என் மீது நீங்கள் மை வீச முயற்சித்தால் நான் உங்கள் மீது சகதியை வீசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.