பெங்களூரு ; புஷ்பா சினிமா பாணியில் தண்ணீர் தொட்டியில் பதுக்கி வைத்திருந்த, 2.68 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,693 கிலோ எடை கொண்ட செம்மர கட்டைகள் பெங்களூரில் பறிமுதல் செய்யப்பட்டன.பெங்களூரு பேட்ராயனபுராவில் உள்ள மைசூரு சாலை சாட்டிலைட் பஸ் நிலையம் அருகில், நியூ டிம்பர் லே – அவுட் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு கடையில், சட்டத்துக்கு விரோதமாக வாடிக்கையாளர்களுக்கு செம்மரங்கள் விற்கப்படுவதாக, பேட்ராயனபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் நாயக்கிற்கு தகவல் கிடைத்தது.
கடந்த 22ம் தேதி போலீஸ் படையுடன் சென்று, குறிப்பிட்ட மரக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வினோத், 39, என்பவரிடம் இரண்டு செம்மர கட்டைகள் இருந்தன. அவரை கைது செய்து, மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர், ஹெசரகட்டாவில் ஒரு பண்ணை வீட்டில் செம்மர கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார். அங்கு சென்று பார்த்த போது, ‘புஷ்பா’ சினிமா பாணியில் தண்ணீர் தொட்டிக்குள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தொட்டியில் இருந்த 1,580 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அங்கிருந்த அஜய், 42, என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவல்படி, மற்றொரு இடத்தில் கடந்த 24ம் தேதி சோதனை செய்து, 113 கிலோ கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக, லட்சுமையா, 36, சஞ்சய், 38, ராஜு, 42, கிருஷ்ணா, 45, ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.மொத்தம், 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1,693 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை, ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து, பெங்களூரில் விற்க முயன்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.பறிமுதல் செய்த செம்மரக் கட்டைகளை, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப்ரெட்டி நேற்று பார்வையிட்டார். சோதனையில் ஈடுபட்ட போலீசாரை பாராட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement