பெங்களூரு: மங்களூருவில் பாஜ நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பிரிவை சேர்ந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கர்நாடகாவில், மங்களூரு மாவட்டம், சூள்யா தாலுகா, பெல்லாரே கிராமத்தை சேர்ந்த பாஜ இளைஞரணி பிரமுகர் பிரவீன் நெட்டார 2 நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். கேரளாவில் இருந்த வந்த கும்பல் இவரை கொன்றதாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவரின் இறுதி ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடியில், ஆர்எஸ்எஸ், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியதால், 2 போலீசார் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சூரத்கல்லில் முகமது பாசில் என்ற வாலிபரை கருப்பு முகமூடி அணிந்த ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மங்களூருவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு உள்ளதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், நேற்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை (ஆக.1) காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
