புதுடெல்லி: சீனாவை சேர்ந்த 81 பேருக்கு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது; கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை இந்தியாவில் தங்கியுள்ள 81 சீனர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 117 பேர் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். விசா நடைமுறைகளை மீறியது, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக நாட்டிற்கு பாதகமானவர்கள் என்ற பட்டியலில் 726 பேர் வைக்கப்பட்டு உள்ளனர். விசா காலம் முடிந்த பின்னும் தங்கி இருப்பது கண்டறியப்பட்டால், நாட்ட விட்டு வெளியேறும்படி நோட்டீஸ் வழங்குவது, அபராதம் விதிப்பது, விசா கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
