புதுச்சேரி: “அனைத்து அரசுப் பள்ளிகளையும் மூடுவதுதான் மத்திய அரசின் திட்டம். புதுவை முதல்வரின் வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியே மூடப்பட்டுள்ளதுதே இதற்கு உதாரணம்” என்று இந்திய மாணவர் சங்க அகில இந்திய தலைவர் ஷானு குற்றம்சாட்டினார்.
“இந்திய தேசத்தை பாதுகாப்போம். கல்வியை பாதுகாப்போம்” என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக பிரச்சாரம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஐந்து இடங்களில் இருந்து இப்பயணம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலம், குஜராத், காஷ்மீர், கொல்கத்தா, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து பயணம் ஆகஸ்ட் 1-ல் தொடங்கியது. இந்த பிரசாரக்குழு பயணம் வரும் செப்.15-ம் தேதி டெல்லியில் நிறைவுபெறும்.
கன்னியாகுமரியில் தொடங்கிய பிரச்சார பயணம் இன்று புதுச்சேரி வந்து அடைந்தது. இதில் பயண குழுவின் தலைவராக இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.ஷானு, மத்திய செயற்குழு உறுப்பினர் நித்திஷ் நாராயணன், தமிழ்நாடு மாநில செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் சத்யா அரவிந்த்சாமி உள்ளிட்டோர் அடங்கிய பயண குழு புதுச்சேரி வந்தபோது வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம், அண்ணாசாலை பகுதிகளில் பிரச்சாரம் செய்துவிட்டு இக்குழுவினர் சென்னை புறப்பட்டனர்.
சுற்றுப்பயணம் தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி. ஷானு கூறியதாவது. “நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் கல்வி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் முன்பாக கல்வியை பாதுகாக்கவும், இந்திய தேசத்தை பாதுகாக்கவும் வலியுறுத்தி வேண்டுமென்பதை பிரச்சாரம் செய்கிறோம். புதியக் கல்விக் கொள்கையால் கடும் பாதிப்பு கல்வியில் ஏற்படும். புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த அரசு பள்ளிகள் மூடப்படுவது நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. புதுச்சேரியிலோ முதல்வர் தொகுதியிலுள்ள அரசு பள்ளியையே மூடுகிறார்கள்.
இதுபோல், அனைத்து அரசுப் பள்ளிகளையும் மூடுவதுதான் மத்திய அரசின் திட்டம், இதை ஏற்க முடியாது. அரசு கல்வி நிலையங்களை மூடி தனியாருக்கு ஆதரவான செயல்பாட்டைதான் செய்கிறார்கள். இதற்கு எதிராக வலுவான போராட்டங்களை முன் எடுப்போம். அதேபோல் குழந்தைகளுக்கு மதிய உணவும் புதுச்சேரியில் சரியாக தருவதில்லை. அட்சயபாத்திரா திட்டத்தில் சரியான மதிய உணவை அரசு பள்ளி குழந்தைகளுக்கு தராததால் அத்திட்டத்தை ரத்து செய்து அரசே மதிய உணவு தரவேண்டும்” என்று குறிப்பிட்டார்.